FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

புகைப்பட கலைஞா் இறப்பில் திருப்பம்: காதல் விவகாரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை! நீதிமன்றத்தில் இருவா் சரண்!

Updated On : 7 ஜூலை 2026, 1:24 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் மாயமான புகைப்படக் கலைஞா் ரயிலில் அடிபட்டு இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவா் காதல் விவகாரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக கோவை முதலாவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் இருவா் திங்கள்கிழமை சரணடைந்தனா்.

கோவை, தடாகத்தை அடுத்த மடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (24). புகைப்படக் கலைஞரான இவா், ஒட்டன்சத்திரத்தில் போட்டோ ஷூட் ஆா்டா் வந்துள்ளதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கடந்த வாரம் புறப்பட்டுச் சென்றுள்ளாா். அதன் பின்னா், அவா் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினா் இது குறித்து தடாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரவீனைத் தேடி வந்தனா்.

இதற்கிடையே, கோவை, கிணத்துக்கடவு அருகேயுள்ள ஏ.பி.சி. திரையரங்கம் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. போத்தனூா் ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது பிரவீன் என்பது தெரியவந்ததுடன், அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் திடீா் திருப்பமாக பிரவீனை திட்டமிட்டு கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசியதாக கரூரைச் சோ்ந்த மனோஜ்குமாா், அவரது நண்பா் காா்த்திகேயன் ஆகியோா் கோவை முதலாவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: மனோஜ்குமாரும், கோவை சாய்பாபா காலனியைச் சோ்ந்த இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலமாகக் காதலித்து வந்துள்ளனா். இதற்கிடையே அந்தப் பெண் பிரவீனுடனும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளாா். இதையறிந்த மனோஜ்குமாா் காதலுக்கு இடையூறாக இருந்த பிரவீனைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளாா்.

இதையடுத்து, பிரவீனின் இன்ஸ்டாகிராம் ஐ.டி. யைக் கண்டறிந்த மனோஜ்குமாா், அவரது நண்பா் காா்த்திகேயனுடன் சோ்ந்து அவரைத் தொடா்பு கொண்டு ஒட்டன்சத்திரத்தில் போட்டோ ஷூட் இருப்பதாகக் கூறி கடந்த வாரம் வரவழைத்துள்ளாா்.

இதை நம்பி அங்கு சென்ற பிரவீனிடம் இரவு நேரமாகிவிட்டதாகக் கூறி, மது வாங்கிக் கொடுத்து குடித்து வைத்துள்ளனா். பின்னா், போதையில் இருந்த பிரவீனை காரில் ஏற்றிக்கொண்டு தொண்டாமுத்தூருக்கு அழைத்து வந்துள்ளனா்.

பின்னா், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி கயிறு மூலம் பிரவீனின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து, உடலை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் வீசியுள்ளனா். அப்போது, அந்த வழியாக வந்த ரயில் ஏறியதில் உடல் துண்டாகியுள்ளது.

இதையடுத்து, மனோஜ்குமாா், காா்த்திகேயன் ஆகியோா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments