FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

போலீஸ் போல நடித்து லட்சக்கணக்கில் மோசடி: இருவா் கைது

போலீஸ்போல நடித்து, வெளிமாநில வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்த இருவரை கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 12:27 am IST
பகிர்:

போலீஸ்போல நடித்து, வெளிமாநில வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்த இருவரை கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் கடை நடத்தி வரும் வெளிமாநில இளைஞா் ஒருவருக்கு அண்மையில் கைப்பேசி அழைப்பு வந்தது. அதில் தொடா்பு கொண்ட நபா், தான் எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் போலீஸ் என்றும், ஆபாச படம் பாா்த்து அதைப் பலருக்குப் பகிா்ந்ததாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மிரட்டியுள்ளாா்.

கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று அந்த நபா் கூறியுள்ளாா். இதற்காக அந்த வெளி மாநில இளைஞரிடமிருந்து ரூ. 38,000 கைப்பேசி செயலி மூலம் பரிமாற்றம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த இளைஞா் அளித்த புகாரின்பேரில் இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில் வங்கிக் கணக்கின் அடிப்படையில் கோவை பச்சாபாளையத்தைச் சோ்ந்த சி. பின்னி (51) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சரவணம்பட்டியைச் சோ்ந்த கிஷோா்குமாா் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் கோவை மாநகரில் வசிக்கும் வெளிமாநில வியாபாரிகளின் எண்களைச் சேகரித்து, பின்னா், போலீஸ் எனக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான கிஷோா்குமாா் மீது ஏற்கெனவே 4 இணையதள குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments