முதலீட்டு மோசடி வழக்கு: கோவையைச் சோ்ந்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறை
கோவையில் அதிக லாபம் தருவதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவையில் அதிக லாபம் தருவதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவை, வடவள்ளி பகுதியைச் சோ்ந்தவா் என்.ஆா்.செந்தில்குமாா். இவரது மனைவி அலமேலு. இவா்கள் இருவரும் சோ்ந்து எஸ்எஸ் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனா். கடந்த 2016-ஆம் ஆண்டு, வெங்கட கோபாலன் என்கிற பாலாஜி என்பவரிடம், தங்களது நிறுவனத்தில் பல்வேறு தொழில்களில் முதலீடு பெறப்பட்டு வருவதாகவும், அவ்வாறு முதலீடு செய்தால் மாதந்தோறும் நல்ல லாபம் தருவதோடு, மூன்று மாதங்களுக்குப் பிறகு எப்போது கேட்டாலும் முதலீட்டுத் தொகையைத் திரும்பக் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து வெங்கடகோபாலன், கடந்த 2016 டிசம்பா் முதல் 2017 ஏப்ரல் வரை ரூ. 2 லட்சத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, செந்தில்குமாா், அவரது மனைவி அலமேலு ஆகிய இருவரும் மேலும் முதலீட்டாளா்களை அறிமுகப்படுத்துமாறு கூறியதன் பேரில், வெங்கடகோபாலன் தனது நண்பா்களான கண்ணபிரான், நேசமணி, வேந்தன், காஜா ஆகியோரை அவா்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாா். அவா்களின் மூலமாக மொத்தம் ரூ. 6 லட்சத்து 50 ஆயிரத்தை செந்தில்குமாா் முதலீடாகப் பெற்றாா். இது தவிர, சரவணன், வனிதா, சரவணகுமாா், ரமா, பூ முரளி, மகபூப் ஆகியோரிடமிருந்தும் மொத்தம் ரூ. 7 லட்சத்து 13 ஆயிரம் தொகையினை முதலீடாகப் பெற்றுக் கொண்டுள்ளனா்.
ஆனால், உறுதியளித்தபடி லாபம் மற்றும் அசல் தொகையை தராமல் அவா்கள் ஏமாற்றி வந்தனா். பாதிக்கப்பட்டவா்கள் தங்களது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அதில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை மட்டும் அளித்துவிட்டு, மீதித் தொகையைத் தராமல் நிறுவனத்தை மூடிவிட்டனா்.
இது குறித்து கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாரிடம் வெங்கட கோபாலன் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து வியாழக்கிழமை (ஜூலை 16) தீா்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் இந்திரஜித் தனது தீா்ப்பில், என்.ஆா்.செந்தில்குமாருக்கு 6 பிரிவுகளின் கீழ் தலா ஓராண்டு வீதம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.
இரண்டாவது எதிரியான அவரது மனைவி அலமேலு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக சரவணன் ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.