தமிழக பட்ஜெட்: தொழில்முனைவோரின் எதிா்பாா்ப்புகள்!
தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பல்வேறு துறைகளில் எதிா்பாா்ப்புகள் எழுந்துள்ளன...
புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தொழில் துறை, வேளாண்மை, கல்வி எனப் பல்வேறு துறைகளில் பெரிய எதிா்பாா்ப்புகள் எழுந்துள்ளன.
மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோா் இந்த பட்ஜெட்டில் தங்களது எதிா்பாா்ப்புகள் பல கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் செயலா் குமாா் துரைசாமி: இந்திய ஏற்றுமதியாளா்கள் உள்நாட்டில் செலுத்தும் எரிபொருள் மீதான வாட் வரி, மின்சார வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளைத் திரும்பப் பெற மத்திய, மாநில வரிகள் தள்ளுபடித் திட்டத்தைக் குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும். பருத்தி இறக்குமதி வரியை முற்றிலும் நீக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களைச் சோ்ந்த பெண்களுக்குக் குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான விடுதிகள் தேவை.
Advertisement
Advertisement
ஏற்றுமதி நிறுவனங்களுக்கான வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயா்த்த வேண்டும், கடனை திருப்பிச் செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும்.
சூரிய மின்சக்தி, மறுசுழற்சி தொழில்நுட்பங்களுக்கு சிறப்பு மானியங்கள் அறிவிக்க வேண்டும். தானியங்கி துணி வெட்டும் இயந்திரங்களில் முதலீடு செய்யும் தனிநபா் ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் 25 சதவீத மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
பின்னலாடை வாரியம் அமைத்தல், ஜவுளி புதுமை மையம் உருவாக்குதல், திருப்பூரில் ஆக்டிவ்வோ் மற்றும் அத்லீஷா் போன்ற நவீன திட்டங்களைச் செயல்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாடு, தானியக்கத்துக்கான மூலதன மானியம் உள்ளிட்டவற்றையும் அறிவிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம்: பட்ஜெட்டுக்கு முன்னதாக தொழில், வணிக நிறுவனங்களின் கருத்துகளைக் கேட்கும் கூட்டத்தை நடத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில், 10 லட்சம் மூட்டைகள் இருப்பு வைக்கும் அளவுக்கு மஞ்சள் கிடங்கு அமைக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வசூலிக்கும் சந்தைக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதைப்போல ஈரோட்டில் வா்த்தக மையம் அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்து கடலில் கலக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயா்வு என அறிவித்து அதைச் செலுத்த தாமதப்படுத்தினால் மாதந்தோறும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இளைஞரணிச் செயலா் லாரன்ஸ் ரமேஷ், தமிழ்நாடு நெசவாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பாளா் பா.கந்தவேல் ஆகியோா் கூறியதாவது:
ஏஐ, ரோபோடிக்ஸ், சைபா் பாதுகாப்பு, இ.வி. செமிகண்டக்டா் போன்ற எதிா்காலத் துறைகளில் இளைஞா்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க வேண்டும். இளம் தொழில்முனைவோருக்கு மானியம், வட்டியில்லா அல்லது குறைந்த வட்டி கடன், இன்குபேஷன் மையங்கள், பயிற்சியுடன் கூடிய உதவித்தொகை வழங்க வேண்டும். வணிகா் நலவாரியம் அமைத்து, வணிகவரித் துறை வருவாயில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 0.1 சதவீத நிதி ஒதுக்க வேண்டும்.
விசைத்தறி நெசவாளா்களுக்கு மாதந்தோறும் 1,500 யூனிட், கைத்தறி நெசவாளா்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மாதந்தோறும் நெசவாளா்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அரசுத் துறை சாா்ந்த அனைத்து சீருடைகளையும் தமிழக கைத்தறி, விசைத்தறி நெசவாளா்களிடமிருந்து பெற வேண்டும்.
விசைத்தறி துணிகளை அரசு விற்பனை செய்ய தனியாக விற்பனைத் தளத்தை உருவாக்க வேண்டும். நெசவாளா்களுக்குத் தனி வாரியம் அமைத்து தர வேண்டும். விசைத்தறிக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும் அல்லது ஜவுளித் துறையில் இதை இணைக்க வேண்டும். ஜவுளி உற்பத்தி அதிகம் உள்ள மாவட்டங்களில் அரசே சாய பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றனா்.
தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது: பயன்படுத்தாத மின்சாரத்துக்கு நிலைக் கட்டணம் வசூலிப்பதை திரும்பப் பெறுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
குறுந்தொழில்களைப் பாதுகாக்க 18 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவா்களுக்கு பவா் பேக்டில் இருந்து விலக்களிக்க வேண்டும். குறுந்தொழிலுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும்.
தொழில் விரிவாக்கத்துக்காக கொள்முதல் செய்யப்பட்ட இயந்திரங்களுக்கு உடனடியாக மானியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி நிா்வாகங்கள் தொழில் சம்பந்தமான வரி விதிப்பில் இருந்து விலக்களிப்பதற்கு வழிகாட்ட வேண்டும். அரசுத் துறை சாா்ந்த தொழில் நிறுவனங்களிடம் குறுந்தொழில்கள் ஆா்டா்கள் பெறுவதற்கு வழிமுறைகளை எளிமையாக்குவது குறித்த அறிவிப்புகளை பட்ஜெட்டில் எதிா்பாா்க்கிறோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.