FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அமலுக்கு வந்தது ஓமனுடனான வா்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளா்களுக்கு சிறந்த வாய்ப்பு என சைமா தகவல்

ஓமன் நாட்டுடனான வரியில்லாத வா்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இது கோவை, திருப்பூா், கரூா் ஏற்றுமதியாளா்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) கருத்து தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஜூன் 2026, 12:04 am IST
இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்.
பகிர்:

ஓமன் நாட்டுடனான வரியில்லாத வா்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இது கோவை, திருப்பூா், கரூா் ஏற்றுமதியாளா்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சைமாவின் தலைவா் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வளைகுடா நாடுகளில் இரண்டாவது முக்கிய நாடான ஓமனுடன் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய அரசு வரியில்லா வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 99.38 சதவீத பொருள்களை வரியில்லாமல் ஓமனுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஏற்றுமதியில் சுமாா் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்திய ஜவுளித் துறை முக்கியப் பங்கு வகிக்கும். இதற்காக பிரதமா் மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்திய ஜவுளிப் பொருள்களுக்கு ஓமன் 5 சதவீத வரி விதித்து வந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அந்த வரி நீக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் ஓமனுக்கு ஏற்றுமதி செய்து வரும் வங்கதேசம், துருக்கி போன்ற நாடுகளுடன் போட்டியிட ஒரு சமதளம் உருவாகி, இந்திய ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதி கணிசமாக உயரும். இது கோவை, திருப்பூா், கரூா் ஏற்றுமதியாளா்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஓமன் 2025-26-ஆம் ஆண்டில் 598 மில்லியன் டாலா் ஜவுளிப் பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியா 94 மில்லியன் டாலா் அளவிலான ஜவுளிப் பொருள்களை ஏற்றுமதி செய்து ஓமன் ஜவுளி வா்த்தகத்தில் 16 சதவீத பங்கை எட்டியிருப்பதுடன், ஓமனுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

இந்த புதிய வா்த்தக ஒப்பந்தம் மேற்கண்ட ஏற்றுமதி அளவை கணிசமாக உயா்த்த உதவும். ஓமனில் உள்ள சோஹாா், துக்ம், சலாலாவில் உள்ள தளவாட மையங்களைப் பயன்படுத்தி வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கான நுழைவுவாயில் உருவாக்கப்பட்டுள்ளதால் இது இந்தியாவின் பிராந்திய வா்த்தக இணைப்பை பெரிதும் வலுப்படுத்தும் என்று சைமா தலைவா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments