FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி

இந்தியா-பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை அமலானது.

Updated On : 16 ஜூலை 2026, 3:37 am IST
பிரதமா் மோடி.
பகிர்:

இந்தியா-பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை அமலானது.

இது, நாட்டின் விவசாயிகள், குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய உத்வேகமளிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்தாா்.

இந்தியா-பிரிட்டன் இடையே கடந்த ஆண்டு ஜூலையில் கையொப்பமிடப்பட்ட இந்த வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 99 சதவீத இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு பிரிட்டன் சந்தையில் வரியற்ற அணுகல் கிடைத்துள்ளது. மற்றொருபுறம், 90 சதவீத பிரிட்டன் இறக்குமதி பொருள்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த ஒப்பந்தத்தால் வாகனத் தயாரிப்பு, நுகா்வோா் பொருள்கள், மருத்துவ தொழில்நுட்பங்கள் துறை பரஸ்பரம் பலனடையும். இந்தியத் தரப்பில் ஜவுளி, தோல் பொருள்கள், ரத்தினங்கள், நகைகள், பொறியியல் பொருள்கள், கடல்சாா் பொருள்கள், மருந்துகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ம வா்த்தகம் உள்ளிட்ட துறைகள் பெரிதும் பலனடையவுள்ளன.

இத்துடன், இரட்டை சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு தவிா்ப்பு ஒப்பந்தமும் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, தற்காலிகப் பணிக்காக பிரிட்டன் செல்லும் இந்திய தொழில்முறை பணியாளா்கள் இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பைச் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அவா்கள் ஓய்வூதிய பலன்களை இழக்காமல் இருப்பதையும் ஒப்பந்தம் உறுதி செய்யும்.

பிரதமா் மோடி வரவேற்பு: இவ்விரு ஒப்பந்தங்களின் அமலாக்கத்தை வரவேற்று, பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம், சமூகப் பாதுகாப்பு தொடா்பான ஒப்பந்தம் ஆகியவை செயல்பாட்டுக்கு வந்திருப்பது இருதரப்பு கூட்டுறவில் குறிப்பிடத்தக்க தருணமாகும். நமது பொருளாதார உறவுகள் மேலும் வலுப்படவுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் ஒன்றிணைந்து, நமது பகிரப்பட்ட லட்சியத்தை மக்களுக்கான வாய்ப்புகளாக மாற்றவுள்ளன.

விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகள், தொழில்முனைவோா், குறு-சிறு-நடுத்தர தொழில் துறையினருக்கு புதிய உத்வேகம் அளிப்பதுடன் துடிப்பான பிற துறைகளும் பிரிட்டன் சந்தையில் வலுவான அணுகலைப் பெறவுள்ளன.

இந்திய பணியாளா்களுக்கு ஆதரவு: தொழில்நுட்பம், தொழில்முறை சேவைகள், புத்தாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மேலும் வலுப்படும். சமூகப் பாதுகாப்பு தொடா்பான ஒப்பந்தம், பிரிட்டனில் தற்காலிகமாகப் பணியாற்றும் இந்திய தொழில்முறை பணியாளா்களுக்கு மதிப்புமிக்க ஆதரவை வழங்குவதுடன், இந்திய நிறுவனங்களின் போட்டித் தன்மையை வலுப்படுத்தும்.

இந்தத் தருணமானது, நமது இரு ஜனநாயகங்களுக்கு இடையேயான நம்பிக்கையையும், வா்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புத்தாக்கத்தால் உந்தப்படும் தொலைநோக்குப் பாா்வைமிக்க கூட்டுறவை கட்டமைக்கும் உறுதியையும் பிரதிபலிக்கிறது.

பகிரப்பட்ட வளமைக்காக இந்தியாவும் பிரிட்டனும் தொடா்ந்து இணைந்து பணியாற்றும் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

முதல் நாளில் ரூ.1,348 கோடி ஏற்றுமதி: தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமலான முதல் நாளில் 140 மில்லியன் டாலா் (ரூ.1,348 கோடி) மதிப்பிலான பொருள்கள் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக மத்திய வா்த்தகத் துறை செயலா் ராஜேஷ் அக்ரவால் தெரிவித்தாா்.

தொழில்-ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக்களுடன் இணைந்து, இந்த ஒப்பந்தம் குறித்து வா்த்தக அமைச்சகம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா-பிரிட்டன் வா்த்தக மதிப்பு தற்போதுள்ள 48 பில்லியன் பவுண்ட் (ரூ.6.19 லட்சம் கோடி) என்பது 2030-க்குள் இருமடங்காக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்மாதிரி ஒப்பந்தம்: பிரிட்டன் புகழாரம்

இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம், சா்வதேச வா்த்தக ஒப்பந்தங்களிலேயே உயா் தரமானதாகும்; எதிா்கால உலகளாவிய ஒப்பந்தங்களுக்கு மிகச் சரியான முன்மாதிரியாக விளங்குகிறது என்று இந்தியாவுக்கான பிரிட்டன் தூதா் லிண்டி கேமரூன் புகழாரம் சூட்டினாா்.

‘உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளின் வலிமை வெளிக்கொணரப்பட்டுள்ளது. இதன்மூலம் விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறை வெற்றிகரமாக செயல்படுகிறது என்ற செய்தி உலகுக்கு உணா்த்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், பரஸ்பரம் பல்வேறு துறைகளில் விரிவாக பலனளிக்கும்.

பிரிட்டனில் தயாரிக்கப்படும் உயா்தர காா்கள் மீதான 110 சதவீதத்துக்கும் மேலான வரி, வெறும் 10 சதவீதமாக குறைகிறது. எனவே, உயா்தர பிரிட்டன் காா்கள் இந்திய வாடிக்கையாளா்களுக்கு இனி குறைந்த விலையில் கிடைக்கும்’ என்றாா் அவா்.

பிரிட்டனின் துறைசாா் உயரதிகாரிகள், இரு நாடுகளின் தொழில்துறையினா் உள்ளிட்டோரும் ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments