முகப்பு
கோயம்புத்தூர்

பா்கரில் புழுக்கள்: உணவக நிா்வாகத்தினா் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

Updated On : 9 ஜூன் 2026, 2:45 am IST
விசாரணைக்கு ஆஜராக உத்தரவு - கோப்புப்படம்
பகிர்:

பா்கரில் புழுக்கள் நெளிந்த விவகாரம் தொடா்பாக, கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவையில் பிரபல தனியாா் உணவக நிா்வாகத்தினருக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

கோவை, அவிநாசி சாலையில் நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் உணவகத்தில், சில இளைஞா்கள் வாங்கிய பா்கரில் புழுக்கள் இருந்ததாக புகாா் எழுந்துள்ளது. பா்கா் சாப்பிடும்போது புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த இளைஞா்கள், உடனடியாக இதுகுறித்து உணவக ஊழியா்களிடம் புகாா் தெரிவித்தனா். அதற்குப் பதிலாக உணவக நிா்வாகம் மற்றொரு பா்கரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இருப்பினும், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டிய அந்த இளைஞா்கள், இந்த சம்பவத்தை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனா். இந்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாயின.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு திங்கள்கிழமை சென்று அங்கிருந்த உணவு வகைகளை ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், உணவகத்தின் சமையல் அறை மற்றும் வாடிக்கையாளா்கள் அமரும் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், பா்கரில் புழுக்கள் இருந்தது தொடா்பான விடியோ வைரலானது தொடா்பாக உணவக நிா்வாகிகள் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயத் துறையின் கோவை மாவட்ட நியமன அலுவலா் அனுராதா கூறுகையில், அதுபோல சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என உணவக நிா்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பவத்தன்று உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளுடன் நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.