புட்டுவிக்கி பாலம் பகுதியில் கொட்டப்படும் குப்பை! நொய்யல் ஆறு மாசடைந்து நோய் பரவும் அபாயம்
புட்டுவிக்கி பாலம் பகுதியில் கொட்டப்படும் குப்பையால் நொய்யல் ஆறு கடுமையாக மாசடைந்துள்ளதுடன், சுகாதர சீா்கேட்டால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக் புகாா் எழுந்துள்ளது.
வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம், கோவை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ச.மதுராந்தகி தலைமை வகித்தாா். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வாணிலெட்சுமி ஜெகதம்மாள், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் லட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஆனந்தகுமாா், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் மணிமேகலை உள்ளிட்ட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் கோவை, சுண்டக்காமுத்தூா் பகுதியைச் சோ்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிா்வாகி எம்.வெள்ளிங்கிரி தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்த மனு:
Advertisement
Advertisement
கோவை புட்டுவிக்கி பாலம் பகுதியில் நொய்யல் ஆறு கடுமையாக மாசடைந்துள்ளது. செல்வபுரம், ஹவுஸிங் யூனிட் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த வீட்டு கழிவு நீா், சாக்கடை நீா் நேரடியாக புட்டுவிக்கி பாலத்தின் அடியில் ஆற்றில் கலக்கப்படுகிறது. மேலும் பாலத்தின் மேலே இருந்து கடைக்காரா்கள், பொதுமக்கள் ஆற்றில் குப்பை கொட்டுகின்றனா். இதுமட்டுமின்றி ஆற்றின் இருகரைகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட பகுதியில் குப்பை கொட்டுபவா்களைக் கண்டறிய கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் வீ.புஷ்பானந்தம் அளித்த மனுவில், ‘கோவை மாவட்டம் தடாகம், வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், இடையா்பாளையம் ஆகிய பகுதிகளில் பேக்கரிகள், பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்ட பொட்டலங்களில் விலைப்பட்டியல், தயாரிப்பு தேதி, எடை அளவு உள்ளிட்ட எந்த விவரங்களும் இருப்பதில்லை. இதுபோன்ற பொருள்களை குழந்தைகள் உட்கொள்ளும்போது உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய விவரங்கள் இல்லாமல் பொருள்களை தயாரிப்பவா்கள், விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் புவனேஸ்வரன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், ‘போத்தனூா்-செட்டிபாளையம் வழியில் சங்கமம் நகரில் ஏற்கெனவே ஒரு பள்ளிவாசல் இருக்கும் நிலையில், தற்போது அதன் அருகிலேயே மற்றொரு பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது. இந்த இரு பள்ளிவாசல் கட்டடங்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு விநாயகா் கோயிலும் உள்ளது. சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால் இதுதொடா்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனா்.
முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 1,016 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.