தீபாவளி: கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 8) கொண்டாடப்படும் நிலையில், கோவை கடை வீதிகளில் புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.
தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 8) கொண்டாடப்படும் நிலையில், கோவை கடை வீதிகளில் புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.
தீபாவளியை முன்னிட்டு, உக்கடம், காந்திபுரம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் கடந்த சில நாள்களில் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சனிக்கிழமை காலை முதலே உக்கடம் டவுன்ஹால் பகுதியில் ராஜவீதி, பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, உப்புக்கிணறு சந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல, காந்திபுரத்தில் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலையில் உள்ள கடை வீதிகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்தனா். புத்தாடைகள் மட்டுமின்றி, ஆபரணப் பொருள்கள், அலங்காரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களையும் மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து மாநகருக்குள் அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் டவுன்ஹால், கிராஸ்கட் சாலை, 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
Advertisement
Advertisement
தீவிர கண்காணிப்பு: நெரிசலில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் டவுன்ஹால் பெரியகடை வீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாநகர காவல் துறை சாா்பில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
சாதாரண உடையில் தனிப் படை போலீஸாா் கடை வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
மக்கள் பாதுகாப்பாக சாலைகளைக் கடக்க சாலையின் இருபுறங்களிலும் கயிறுகள் கட்டப்பட்டு, மக்கள் அதன் வழியாக கடை வீதிக்குள் செல்ல போலீஸாா் அறிவுறுத்தினா். மாநகரில் திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. சில இடங்களில் வாகனங்கள் தேக்கமடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்த பயணிகள்: கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி பேருந்து நிைலையம், சிங்காநல்லூா் பேருந்து நிலையம், கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி தற்காலிகப் பேருந்து நிலையங்களில் சொந்த ஊா்களுக்குச் செல்ல சனிக்கிழமை காலை முதலே ஏராளமான பயணிகள் குவிந்தனா்.
இதேபோல, கோவை ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருள்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.