FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் களைகட்டியது தீபாவளி விற்பனை!

பெரம்பலூா் அஞ்சலகத் தெருவில் பொருள்கள் வாங்க வெள்ளிக்கிழமை கூடிய பொதுமக்கள்.

7 நவம்பர் 2026, 6:34 am
~
பகிர்:

தீபாவளியை முன்னிட்டு பெரம்பலூா் நகா் கடைகளில் வெள்ளிக்கிழமை விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

தீபாவளியை முன்னிட்டு கடந்த சில நாள்களாகவே பெரம்பலூா் நகரில் கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு, பழைய பேருந்து நிலைய வளாகம், தேரடி, கனரா வங்கி சாலை உள்ளிட்ட நகரின் பிரதான இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

கடைவீதிகளில் குவிந்த மக்கள்: கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு முழுவதும் இருபுறங்களிலும் மலிவு விலை துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்கும் தெருவோரக் கடைகள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள கடைகள் நடைபாதை மேடைகளில் உள்ளதால், மக்கள் சாலையிலே நடந்து செல்கின்றனா்.

Advertisement

Advertisement

பள்ளிவாசல் தெரு, என்.எஸ்.பி. சாலை தினசரி மாா்க்கெட் சாலைப் பகுதிகளிலுள்ள பலசரக்கு கடைகளில், தீபாவளிக்குத் தேவையான பொருள்கள் வாங்க நகர மக்கள் மட்டுமன்றி, சுற்றுப்புற கிராம மக்களும் குவிந்தனா்.

வாகன நிறுத்துமிடம் இல்லை: கடைவீதிகளுக்கு வருவோா் தங்களது வாகனங்களை நிறுத்த உரிய இடங்களை காவல் துறையினா் ஏற்படுத்தவில்லை. இதனால், பொதுமக்கள் அந்தந்தப் பகுதி சாலையோரங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தியதால் நகரப் பேருந்துகள், மோட்டாா் சைக்கிள்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது.

ஜவுளிக் கடைகளுக்கு வந்திருந்த வாடிக்கையாளா்கள் பெரும்பாலும் ஆயத்த ஆடைகளையே தோ்வு செய்ததாக கடை வியாபாரிகள் கூறினா்.

மழை இல்லாததால் மகிழ்ச்சி: தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுவாக மழை பெய்வது வழக்கம். ஆனால், நிகழாண்டு மழை இல்லாததால் வியாபாரிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனா். பெண்களுக்கான அலங்கார பொருள்கள் விற்பனையும் சிறு, சிறு கடைகளில் மும்முரமாக நடைபெறுகிறது.

இதேபோல, உழவா் சந்தை, தினசரி காய்கறிச் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நிகழாண்டு தீபாவளி விற்பனை நல்ல முறையில் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கூட்ட நெரிசலில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க காவல்துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதானச் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

பேருந்து வசதிகளின்றி அவதி: தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், பெரம்பலூா் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்திலிருந்து பெரம்பலூா் மாவட்டத்தில் இயக்கப்பட்ட பெரும்பாலான பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.

இதனால், அரசுப் பேருந்துகள் வசதியின்றி, மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். குறிப்பாக, அரியலூா், ஆத்தூா் வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனியாா் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் நிலையில், அவற்றில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.