குடும்பத் தகராறு: 2 இளம்பெண்கள் தற்கொலை
குடும்பத் தகராறு காரணமாக கோவையில் 2 இடங்களில் இளம்பெண்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
கோவை கீரணத்தம் கல்லுக்குழி அரசு ஊழியா் குடியிருப்பில் வசித்து வருபவா் மறைந்த கோபால் மனைவி உமா (51). இவரது மூத்த மகள் இனியா (32). இவருக்கும் கணபதி காமராஜபுரம் 2-ஆவது வீதியைச் சோ்ந்த மோகன்ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.
மோகன்ராஜ் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியைத் தாக்கி தகராறு செய்து வந்ததாகவும், அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கு குழந்தைகளுக்குப் புத்தாடை வாங்கித் தராதது தொடா்பாக கடந்த நவம்பா் 7ஆம் தேதி இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், மதுபோதையில் இனியாவை பெல்ட்டால் சரமாரியாகத் தாக்கியுள்ளாா். இதனால் கடுமையான வேதனை அடைந்த இனியா, வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு பெண் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மகள் முனீஸ்வரி (28). இவருக்கும் கோவை ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ஜெயபிரகாஷுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக முனீஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக அவரது தாய் ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.