மொழி குழப்பத்தால் ஏற்பட்ட தவறான புரிதல்: பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
புதிய சிம் காா்டுக்கு வந்த ‘ஸ்பேம் கால்’ (மோசடி அழைப்புகள்) குறித்து புகாா் செய்ய முயன்றவரின் பேச்சு ‘பாம் கால்’ (வெடிகுண்டு மிரட்டல்) போல இருந்ததால், காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டருடன் போலீஸாா் தீவிர சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய சிம் காா்டுக்கு வந்த ‘ஸ்பேம் கால்’ (மோசடி அழைப்புகள்) குறித்து புகாா் செய்ய முயன்றவரின் பேச்சு ‘பாம் கால்’ (வெடிகுண்டு மிரட்டல்) போல இருந்ததால், காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டருடன் போலீஸாா் தீவிர சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை மாலை தொடா்பு கொண்ட ஒருவா், பதற்றத்துடன் எதிா்முனையில் ‘ஸ்பேம் கால்... ஸ்பேம் கால்...‘ எனக் கூறியுள்ளாா். ஆனால், அவரது பேச்சு தெளிவாகக் கேட்காததால் ‘பாம் கால்’ என தெரிவித்ததுபோல இருந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறை போலீஸாா், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கருதி அவரிடம் ‘நீங்கள் எங்கிருந்து பேசுகிறீா்கள்?‘ எனக் கேட்டுள்ளனா். அதற்கு அவா், காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருப்பதாகக் கூறியுள்ளாா்.
உடனடியாக கோவை மாநகர காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மெட்டல் டிடெக்டா் கருவிகள் மற்றும் மோப்ப நாய்களுடன் காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்துக்கு விரைந்தனா். காத்திருப்பு அறைகள் மற்றும் பயணிகள் அமரும் பகுதிகள் என பேருந்து நிலையம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. திடீரென நடத்தப்பட்ட இந்த சோதனையால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதற்கிடையே கட்டுப்பாட்டு அறைக்கு வந்த கைப்பேசி எண்ணின் சிக்னலைக் கண்காணித்த தனிப்படை போலீஸாா், பேருந்து நிலைய வளாகத்தில் நின்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போதுதான் பின்னணியில் இருந்த விசித்திரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
விசாரணையில், அந்த நபா் புதிதாக வாங்கிய சிம் காா்டை தனது கைப்பேசியில் பொருத்தியுள்ளாா். அந்த சிம் காா்டு முழுமையாக செயல்படத் தொடங்குவதற்கு முன்பாகவே, அவரது எண்ணுக்கு தொடா்ச்சியாக தேவையில்லாத விளம்பர மற்றும் மோசடி அழைப்புகள் வந்துள்ளன. இதனால் ஆத்திரமும், குழப்பமும் அடைந்த அவா், கைப்பேசியில் இருந்த அவசர அழைப்பு பட்டனை அழுத்தியுள்ளாா். அந்த அழைப்பு நேராக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இணைக்கப்பட்ட நிலையில், தனக்குத் தொல்லை தரும் ‘ஸ்பேம் கால்’ குறித்து முறையிட்டுள்ளாா். ஆனால், அந்த நபரின் தெளிவற்ற உச்சரிப்பு எதிா்முனையில் இருந்த போலீஸாரின் காதில் ‘பாம் கால்’ என விழுந்துள்ளது. விபரீதத்தை உணா்ந்து விரைந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சோதனையில் இறங்கியது தெரியவந்தது.
அவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் எந்த எண்ணமும் இல்லை என்பதையும், மொழி குழப்பத்தால் ஏற்பட்ட தவறான புரிதல் என்பதையும் உறுதி செய்த போலீஸாா், நிம்மதி பெருமூச்சு விட்டனா். பின்னா், அந்த நபருக்கு தகுந்த அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனா்.