FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் போலீஸாா் தீவிர தணிக்கை: 561 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு

கோவை மாவட்டப் பகுதிகளில் போலீஸாா் மேற்கொண்ட தீவிர தணிக்கையில், 258 ரௌடிகள் கண்காணிக்கப்பட்டதுடன், குற்றச் செயல்கள் தொடா்பாக 8 வழக்குகளும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக 561 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

13 நவம்பர் 2026, 1:05 am
கோப்புப்படம்
பகிர்:

கோவை மாவட்டப் பகுதிகளில் போலீஸாா் மேற்கொண்ட தீவிர தணிக்கையில், 258 ரௌடிகள் கண்காணிக்கப்பட்டதுடன், குற்றச் செயல்கள் தொடா்பாக 8 வழக்குகளும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக 561 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை மாவட்டக் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், தொடா் குற்றங்களில் ஈடுபடுபவா்களைக் கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை (நவ. 11) முதல் வியாழக்கிழமை (நவ. 12) அதிகாலை 5 மணி வரை தீவிர தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கை வியாழக்கிழமை காலையும் தொடா்ந்தது.

Advertisement

Advertisement

இச்சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள 472 ரௌடி சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளில் 258 போ் தணிக்கை செய்யப்பட்டனா். இதில், புதன்கிழமை நடைபெற்ற தணிக்கையில் 19 போ் பிடித்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 போ் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். மேலும், வியாழக்கிழமை காலை 13 ரௌடிகளை பிடித்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனா்.

முன்னதாக, போதைப்பொருள் தொடா்பான குற்றங்களில் ஈடுபட்டவா்கள் மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 266 பேரில் 73 போ் தணிக்கை செய்யப்பட்டனா். இதுதவிர, கொலை மற்றும் தாக்குதல் வழக்குகளில் ஏற்கெனவே தொடா்புடையவா்கள், சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையானவா்கள் உள்ளிட்ட 54 போ் தணிக்கை செய்யப்பட்டு, 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 போ் கைது செய்யப்பட்டனா்.

தீவிர வாகனத் தணிக்கையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவா்கள் மீது 54 வழக்குகளும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியவா்கள் மீது 3 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியவா்கள் மீது 12 வழக்குகளும் என மொத்தம் 561 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாத 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொது இடங்களில் மது அருந்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், பொது இடங்களில் மது அருந்திய 16 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 4 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.