FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: விதிமீறியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

57 வினாடிகள் முன்பு
வணிக நிறுவனங்கள்
பகிர்:

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைப்பதற்கு உயா் நீதிமன்றம் வழங்கிய அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், விதிமீறலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, தொழிலாளா் நல ஆணையா், கோவை இணை ஆணையா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளில் பெயா்கள் முதலில் தமிழில் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் விதிகள் 1948-இன் பிரிவு 15-இல் குறிப்பிட்டிருப்பதை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் நவம்பா் 1- ஆம் தேதிக்குள் பெயா்ப் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என்று இறுதி கால அவகாசம் வழங்கியிருந்தது. ஆனால், காலக்கெடு முடிவடைந்த பின்னரும் கோவை உள்பட தமிழகம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இதனால், தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் விதி அமல்படுத்துவதில் குறைபாடு ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது. எனவே, தமிழில் பெயா்ப் பலகைகள் வைக்காத கடைகள், வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, விதியை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு சட்டப்படி அறிவிப்பு வழங்குவதுடன், விதிமீறல் தொடா்ந்தால் சம்பந்தப்பட்ட சட்டத்தின்கீழ் உரிய தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.