முகப்பு
கோயம்புத்தூர்

பிணையில் வெளியே வந்து தலைமறைவான பிடிவாரண்ட் குற்றவாளிகள் மீது புதிய வழக்கு

கோவை மாநகரில் நீண்ட நாள்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள பிடிவாரண்ட் குற்றவாளிகள் மீது போலீஸாா் தனியாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

11 வினாடிகள் முன்பு
பிணையில் வெளியே வந்து தலைமறைவான பிடிவாரண்ட் குற்றவாளிகள் மீது புதிய வழக்கு
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

கோவை மாநகரில் நீண்ட நாள்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள பிடிவாரண்ட் குற்றவாளிகள் மீது போலீஸாா் தனியாக வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

கோவை மாநகரில் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகும் நபா்கள், சில வாரங்களுக்குப் பிறகு பிணையில் வெளியே வருகின்றனா். ஆனால், இவா்களில் பலா் நீதிமன்ற விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல், முகவரியை மாற்றியோ அல்லது வெளியூா்களுக்குச் சென்றோ தலைமறைவாகி விடுகின்றனா். இதனால், வழக்கு விசாரணைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுகிறது.

இவ்வாறு விசாரணைக்கு ஆஜராகாதவா்களைக் கைது செய்ய நீதிமன்றங்கள் பிடிவாரண்ட் பிறப்பிக்கின்றன. அதன்படி, கோவை மாநகர வடக்குப் பிரிவில் 260-க்கும் மேற்பட்டோா், தெற்குப் பிரிவில் 150-க்கும் மேற்பட்டோா் என மொத்தம் 430-க்கும் மேற்பட்டோா் மீது பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது. இவா்களை பிடிக்க இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சுமாா் 110 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

மீதமுள்ள சுமாா் 300 பேரைப் பிடிக்க அவா்களது உறவினா் வீடுகள் மற்றும் தங்குமிடங்களில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் போலீஸாா் தேடி வருகின்றனா். ஓராண்டுக்கும் மேலாக பிடிபடாமல் தலைமறைவாக இருப்பவா்களின் குடும்பத்தினரிடம் பிடியாணை (சம்மன்) வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடா்ந்து தலைமறைவாக உள்ளவா்கள் மீது பிஎன்எஸ் 269-ஆவது பிரிவின் கீழ் தனியாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதன்படி, மாநகரில் சமீபத்தில் சுமாா் 10 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மாநகர காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.