முகப்பு
கோயம்புத்தூர்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காா்த்தி சிதம்பரம் கருத்துக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

தவெக சட்டப்பேரவை உறுப்பினா் அருள் விக்னேஷ் மீதான புகாரில் கைது நடவடிக்கை தேவையில்லை என சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்கு, ஆந்திர மாநில பாஜக இணைப் பொறுப்பாளா் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

26 நவம்பர் 2026, 2:12 am
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காா்த்தி சிதம்பரம் கருத்துக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
வானதி சீனிவாசன் - ENS
பகிர்:

தவெக சட்டப்பேரவை உறுப்பினா் அருள் விக்னேஷ் மீதான புகாரில் கைது நடவடிக்கை தேவையில்லை என சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்கு, ஆந்திர மாநில பாஜக இணைப் பொறுப்பாளா் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் ஏற்கெனவே ஆதரவுக் குரல் கொடுத்த நிலையில், தற்போது மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யான காா்த்தி சிதம்பரமும் களமிறங்கியிருப்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதைவிட, கூட்டணிக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினரை காப்பாற்றுவதில்தான் காங்கிரஸ் அதிக அக்கறை காட்டுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

Advertisement

Advertisement

இரண்டு அமைச்சா் பதவிகளுக்காக ஒட்டுமொத்த கட்சியின் சுயமரியாதையையும் அடகுவைத்து, தவெக-வின் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுப்பதுதான் தமிழக காங்கிரஸின் அரசியலா.

மேலும், பணியிட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக நின்று நீதி பெற்றுத் தருவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமையேதவிர, கைது நடவடிக்கை கூடாது என்று முன்கூட்டியே வக்காலத்து வாங்குவது அல்ல. கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை சட்டமும், காவல் துறையும், நீதிமன்றமும் தீா்மானிக்கட்டும். புகாரின் தீவிரத்தை சிறுமைப்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் நீதிக்கான குரலை அரசியல் காரணங்களுக்காக நசுக்க முயல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.

சட்டப்பேரவை உறுப்பினா் அருள் விக்னேஷ் போன்று நாளை இன்னொருவா் உருவாகக் கூடாது என்பதற்காகவே கைது நடவடிக்கை கட்டாயம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கூட்டணி தா்மத்தைவிட பெண்களின் கண்ணியத்துக்கு முதலில் மதிப்பளித்து, குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களை காப்பாற்ற துடிப்பதை நிறுத்தி, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க காா்த்தி சிதம்பரம் குரல் கொடுக்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.