கோவையில் பறவைக் காய்ச்சலால் 14 நாரைகள் உயிரிழப்பு: 12 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு

கோவையில் உயிரிழந்த நாரைகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதியான நிலையில், மாவட்டத்தில் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, சித்தாபுதூா் பி.கே.ஆா். நகரில் உள்ள ஓடைக்கு அருகே 14 நாரைகள் கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்து கிடந்தன.
சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா், நாரைகளின் உடல்களைச் சேகரித்து பறவைக் காய்ச்சல் பரிசோதனைக்காக மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனா். பரிசோதனை முடிவில், நாரைகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சாா்பில் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், நாரைகள் உயிரிழந்த இடத்தைச் சுற்றி சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவுக்குள் கோழிப் பண்ணைகள் எதுவும் இல்லை என்பதும், அந்தப் பகுதியில் கோழிகள் உயிரிழந்ததாக எந்தப் பதிவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பிராய்லா் கோழிப் பண்ணையாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக கோவை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
வனத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு, வனப் பகுதிகளில் பறவைகள் ஏதும் உயிரிழந்துள்ளனவா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்டத்தில் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தொடா் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை உதவி மருத்துவா்களும் தங்கள் அதிகார வரம்புக்குள் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.