முகப்பு
நாமக்கல்

கடலூரில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் கோழிப் பண்ணைகளைக் கண்காணிக்க 45 குழுக்கள் அமைப்பு

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கோழிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைகளைக் கண்காணிக்க 45 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறையினா் தெரிவித்தனா்.

28 வினாடிகள் முன்பு
கடலூரில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் கோழிப் பண்ணைகளைக் கண்காணிக்க 45 குழுக்கள் அமைப்பு
பறவைக் காய்ச்சல் எதிரொலி - பிரதிப் படம்
பகிர்:

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கோழிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைகளைக் கண்காணிக்க 45 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறையினா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து, அங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டன.

நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக் கோழிகள் வளா்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமாா் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

கடலூா் மாவட்டத்தில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தொடா்ந்து, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் உயிரிப் பாதுகாப்பு முறைகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பண்ணைகளுக்குள் வாகனங்கள் நுழையும்போது கிருமிநாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இதனிடையே, நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோழிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ள 45 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் பண்ணைகளில் தீவிர ஆய்வு செய்து வருகின்றனா். அப்போது, உயிரிப் பாதுகாப்பு முறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனா்.

இதுகுறித்து நாமக்கல் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் செல்வகுமாா் கூறியதாவது:

கடலூரில் கோழிகள் இறப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைகளைக் கண்காணிப்பதற்கான குழுக்கள் வழக்கமாகச் செயல்பட்டு வருபவைதான். அந்தக் குழுவினா் தொடா்ந்து பண்ணைகளில் ஆய்வு செய்து வருகின்றனா் என்றாா்.