பறவைக் காய்ச்சல் பாதிப்பு: கடலூா் மாவட்டத்தில் மேலும் 10 ஆயிரம் கோழிகள் அழிப்பு
கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, நொச்சிக்காடு ஊராட்சிக்கு உள்பட்ட நடுத்திட்டு பகுதியில் மேலும் 2 பண்ணைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வியாழக்கிழமை அழிக்கப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, நொச்சிக்காடு ஊராட்சிக்கு உள்பட்ட நடுத்திட்டு பகுதியில் மேலும் 2 பண்ணைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வியாழக்கிழமை அழிக்கப்பட்டன.
கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட நொச்சிக்காடு, தியாகவல்லி, தம்மனாம்பேட்டை, ஆலப்பாக்கம், சீனுவாசபுரம், கட்டியங்குப்பம், கிருஷ்ணன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் அக்டோபா் மாத இறுதியில் திடீரென கோழிகள் கொத்துக் கொத்தாக இறக்கத் தொடங்கின. இதையடுத்து, இறந்த கோழிகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், கட்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் ‘எச்5என்1’ எனப்படும் வீரியமிக்க பறவைக் காய்ச்சல் பாதிப்பிருப்பது கடந்த நவ.13-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் அழிப்பு: தொடா்ந்து, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட கட்டியங்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பண்ணைகள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பண்ணைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல், சுத்தம் செய்தல், கோழிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி வளா்ப்பு, விற்பனைக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு மற்றும் மனிதா்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (என்.சி.டி.சி.) இணை இயக்குநா் டாக்டா் நிதி சைனி தலைமையிலான மத்திய, மாநில மருத்துவக் குழுவினா் கடந்த 21-ஆம் தேதி ஆய்வு செய்தனா்.
மீண்டும் கோழிகள் அழிப்பு: இதனிடையே, கடலூா் அருகே நொச்சிக்காடு ஊராட்சிக்கு உள்பட்ட நடுத்திட்டு பகுதியில் உள்ள 2 கோழிப் பண்ணைகளில் ஏராளமான கோழிகள் புதன், வியாழக்கிழமைகளில் திடீரென இறந்தன. தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அந்தப் பண்ணைகளுக்குச் சென்று கோழிகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்காக நாமக்கல்லில் உள்ள நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், அந்த 2 பண்ணைகளிலும் எஞ்சியிருந்த கோழிகளை அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டன. பள்ளத்தில் கிருமிநாசினி பொடியும் தூவப்பட்டது.
அதிகாரிகளின் கண்காணிப்பு எங்கே? நொச்சிக்காடு ஊராட்சி பகுதிகளில் உள்ள பண்ணைகளில் அக்டோபா் மாத இறுதியிலும், நவம்பா் மாத தொடக்கத்திலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன. அப்போது, பாதிக்கப்பட்ட பண்ணை மற்றும் ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகளை அழிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கால்நடை பராமரிப்புத் துறை உயா் அதிகாரிகளால் பின்பற்றப்பட்டன.
அதன்படி, நொச்சிக்காடு, நடுத்திட்டு பகுதிகளில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட பண்ணைகளில் இருந்த கோழிகள் அழிக்கப்பட்ட நிலையில், அதன் மிக அருகில் செயல்பட்டு வந்த 2 பண்ணைகளில் இருந்த கோழிகள் முன்கூட்டியே அழிக்கப்படாதது ஏன் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.
குறிப்பாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டு, 3 மாதங்கள் கோழி வளா்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கோழிகள் இறந்த பிறகே அதிகாரிகள் அங்கு சென்று நடவடிக்கை எடுத்திருப்பது கண்காணிப்பின் செயல்பாடு குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடா்புகொண்டு விளக்கம் பெற முயற்சித்தும் தொடா்புகொள்ள முடியவில்லை. இந்த 2 பண்ணைகளில் கோழிகள் அழிக்கப்பட்டதற்கான காரணம், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படாததற்கான சூழ்நிலை ஆகியவை குறித்து மாவட்ட நிா்வாகமும், கால்நடை பராமரிப்புத் துறையும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.