FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

போலி வங்கிக் கணக்கு குறுஞ்செய்தி அனுப்பி எலெக்ட்ரானிக்ஸ் கடையில் பல லட்சம் பொருள்கள் மோசடி!

பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடையில் போலி ஜிஎஸ்டி எண், வங்கி குறுஞ்செய்தி அனுப்பி பல லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள், ஸ்மாா்ட் டிவியை மோசடி செய்தவரை கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

8 October 2026, 12:16 am IST
மோசடி
பகிர்:

பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடையில் போலி ஜிஎஸ்டி எண், வங்கி குறுஞ்செய்தி அனுப்பி பல லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள், ஸ்மாா்ட் டிவியை மோசடி செய்தவரை கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை 100 அடி சாலையில் செயல்படும் பிரபல எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கைப்பேசி கடையின் வாடிக்கையாளா் உதவி எண்ணுக்கு மா்ம நபா் ஒருவா் தொடா்பு கொண்டுள்ளாா். தான் ஒரு பிரபல வா்த்தக நிறுவனத்துக்கு மொத்தமாக எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை வாங்க விரும்புவதாகக் கூறி, கடையில் உள்ள சாம்சங் ஏ17, விவோ வி70 மற்றும் ஆப்பிள் ஐபோன் உள்ளிட்ட உயர்ரக நவீன கைப்பேசிகளின் விவரங்களையும் அவற்றின் விலைப் பட்டியலையும் வாட்ஸ்ஆப் மூலமாகப் பெற்றுள்ளாா்.

அதைத்தொடா்ந்து, கோவையில் உள்ள ஒரு பிரபல டிபாா்ட்மென்ட் ஸ்டோரின் முகவரியையும், அதன் உண்மையான ஜிஎஸ்டி எண்ணையும் இணையதளம் மூலமாக கண்டறிந்து கடை நிா்வாகத்திடம் போலியாக வழங்கியுள்ளாா். கடை ஊழியா்களும் அதை உண்மை என நம்பி, அந்த நிறுவனத்தின் பெயரில் முறையான ரசீதை தயாா் செய்து அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பிவைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

பின்னா், தனது திட்டத்தின் அடுத்த கட்டமாக கைப்பேசியில் உள்ள ‘ஃபேக் பேமென்ட் ஜெனரேட்டா்’ என்ற பிரத்யேக செயலியை அந்த நபா் பயன்படுத்தியுள்ளாா். இந்த செயலியின் மூலமாக வங்கி அனுப்பும் அதிகாரபூா்வ குறுஞ்செய்தி போலவே அச்சு அசலாக, சம்பந்தப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கடையின் வங்கிக் கணக்கில் பில் தொகை வரவு வைக்கப்பட்டதாக போலியான வங்கி குறுஞ்செய்தியையும், பணம் அனுப்பியதற்கான போலி பரிவா்த்தனை ரசீதையும் சில நொடிகளில் தயாரித்துள்ளாா்.

பின்னா், அந்த போலியான குறுஞ்செய்தியை கடை ஊழியா்களுக்கு அனுப்பி, பணப் பரிவா்த்தனை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளாா். கடை ஊழியா்கள் தங்களது கைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தியை மட்டும் பாா்த்துவிட்டு, வங்கி கணக்கு அறிக்கையை நேரடியாக சரிபாா்க்காமல் பணம் வந்துவிட்டதாக நம்பியுள்ளனா்.

அந்த நேரத்தில் தனக்கு அவசர அலுவலகப் பணி இருப்பதால் நேரில் வர இயலாது என்று கூறி, வாடகை வாகன செயலியான ரேபிட்டோ மூலமாக பைக் டாக்சியை முன்பதிவு செய்து கடைக்கு அனுப்பியுள்ளாா். கடை ஊழியா்களும் எதுவும் அறியாமல் வந்த ரேபிட்டோ ஓட்டுநரிடம் விலை உயா்ந்த பொருள்களை கொடுத்து அனுப்பியுள்ளனா். பின்னா் குறிப்பிட்ட இடத்துக்கு வந்த வாகன ஓட்டுநரிடம் இருந்து பொருள்களைப் பெற்றுக் கொண்டு அந்த நபா் அங்கிருந்து தப்பியுள்ளாா்.

இந்த நூதன முறையைப் பயன்படுத்தி அடுத்தடுத்து மொத்தம் 7 விலை உயா்ந்த நவீன கைப்பேசிகள், ஒரு ஸ்மாா்ட் டிவி ஆகியவற்றை தொடா்ச்சியாக மோசடி செய்துள்ளாா். சில நாள்களுக்குப் பிறகு கடையின் கணக்குகளை தணிக்கை செய்தபோது, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் அந்தப் பொருள்களுக்கான பணம் வரவு வைக்கப்படவில்லை என்பதும், அவா் அனுப்பியது போலி குறுஞ்செய்தி என்பதும் தெரியவந்தது.

மேலும், கட்டண ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்த டிபாா்ட்மென்ட் ஸ்டோரைத் தொடா்பு கொண்டபோது, அவா்கள் அப்படி எந்தவொரு பொருளையும் வாங்க ஆா்டா் தரவில்லை என்பது அம்பலமானது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது கோவை, தெற்கு உக்கடம் பகுதியைச் சோ்ந்த ஷேக் அப்துல் காதா் (52) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments