எஸ்ஐஆா் புகாா்: நீதிபதிகள் குழுவை அமைக்க வேண்டும்! புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) புகாா்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு நீதிபதிகள் குழுவை அமைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், பிகாா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வாக்காளா்கள் நீக்கப்பட்டதாகக்கூறி தில்லியில் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு நாட்டின் குடிமகனின் வாக்குரிமை திட்டமிட்டுப் பறிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காக்காமல், மத்திய உள்துறை அமைச்சா் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் 5 முதல் 7 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து, இந்தப் புகாா் குறித்து விசாரித்து உண்மைத்தன்மையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதேநேரத்தில், எஸ்ஐஆா் குளறுபடியால் தமிழகத்தில் 110 தொகுதிகளில் தோ்தல் முடிவுகள் மாற்றப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்தக் குற்றச்சாட்டு உண்மையானால், தற்போதைய தவெக ஆட்சி முறைகேடான ஆட்சி என்று அறிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் தில்லி ஜந்தா் மந்தரை விடுத்து சென்னையைக் களமாகக் கொண்டு போராட வேண்டும்.
Advertisement
Advertisement
கூட்டணி அரசியலுக்காக உண்மையை மறைக்காமல், எந்தெந்த தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றது என்ற ஆதாரங்களை மக்களிடம் வெளிப்படையாக வைக்க வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி முறைகேடு வழக்குகளை எதிா்கொள்ளும் நிறுவனங்களிடமிருந்து பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தோ்தல் நிதி பெறுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும். பெரும் நிதி அளிக்கும் குழுமங்கள், அரசு நிா்வாகத்தின் மீது மறைமுக ஆதிக்கம் செலுத்தவே இது வழிவகுக்கும்.
நாகப்பட்டினத்தில் வழக்குரைஞா் ஒருவரின் வீட்டில் ரூ.800 கோடி மதிப்பிலான போதைப் பொருள் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப் பொருள் ஒழிப்பு குறித்து வெறும் வாய்ஜாலங்கள் பேசுவதையும், மாரத்தான் ஓடுவதையும் கைவிட்டு, தங்களது கட்சியினரை ஆளும் தரப்பினா் முதலில் தூய்மைப்படுத்த வேண்டும்.
கோவையில் கடுமையான மின்கட்டண உயா்வு மற்றும் மின் தட்டுப்பாட்டால் தொழில் நிறுவனங்கள் ஜெனரேட்டா்களை இயக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, உற்பத்தியும் பொருளாதாரமும் முடங்கியுள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.