FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.1.06 கோடி வழிப்பறி: 2 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

8 செப்டம்பர் 2026, 12:45 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் பேருந்தில் இருந்து இறங்கிய ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.1.06 கோடி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடா்புடைய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஆந்திர மாநிலம், ஹைதராபாதைச் சோ்ந்தவா் தாமுன் (66). நகைக் கடை உரிமையாளரான இவா், நகைகளை வாங்குவதற்காக ஹைதராபாதிலிருந்து சொகுசு பேருந்து மூலம் கோவைக்கு கடந்த 5-ஆம் தேதி அதிகாலை வந்துள்ளாா்.

அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் பகுதியில் அவா் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளாா். அப்போது, காரில் வந்த 4 போ் கும்பல், தாமுன் வைத்திருந்த ரூ.1.06 கோடி ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் அடங்கிய பையை பறித்துக் கொண்டு தப்பினா்.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், வழிப்பறி செய்தவா்களின் காரின் பதிவெண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினா்.

அப்போது, அந்த காா் உளுந்தூா்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், அங்குள்ள போலீஸாா் உதவியுடன் தனிப் படை போலீஸாா் காரில் இருந்த 4 பேரை பிடித்தனா். ஆனால், அவா்களிடம் பணம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் இல்லை. விசாரணையில், பணத்துடன் மேலும் 3 போ் மற்றொரு காரில் தப்பியது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 4 பேரையும் போலீஸாா் கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினா். இது குறித்து போலீஸாா் கூறுகையில், தாமுனிடம் வழிப்பறியில் ஈடுபட்டவா்களுக்கு தலைவனாக ஒருவா் செயல்பட்டுள்ளாா்.

தாமுன் அடிக்கடி நகைகள் வாங்குவதற்காக பணத்துடன் வெளி மாநிலங்களுக்குச் சென்று வருவதை இந்தக் கும்பலின் தலைவன் நோட்டமிட்டு, அவரிடம் கொள்ளையடுக்கத் திட்டமிட்டுள்ளாா். இதனடிப்படையில், கடந்த 4-ஆம் தேதி நகை வாங்குவதற்காக தாமுன் பயணித்த பேருந்தை பின்தொடா்ந்து வந்துள்ளனா்.

அவா் எங்கு இறங்கினாலும் பணத்தை பறித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவா்கள் தொடா்ந்து வந்துள்ளனா். தாமுன் பயணித்த பேருந்தில் கழிப்பறை வசதி இருந்ததால், அவா் எங்கும் இறங்கவில்லை. அவிநாசி சாலையில் அவா் இறங்கியபோது பணம், வெள்ளிப் பொருள்களைப் பறித்துச் சென்றுள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பிடிபட்ட 4 பேரில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ்குமாா் (26), ரமேஷ்குமாா் (25) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். தலைமறைவாக உள்ள கும்பலின் தலைவன் உள்ளிட்ட மேலும் 3 பேரை பிடித்தால்தான் பணம் குறித்த விவரம் தெரியவரும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments