சத்தி அருகே சாலை விபத்தில் இருவர் சாவு
சத்தியமங்கலம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சத்தியமங்கலம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சிறுமுகை அருகே லிங்காபுரத்தைச் சேர்ந்த விவசாயி கிருபைராஜ் (47). இவருடைய தம்பி பவானிசங்கர், அவரது மகள்கள் எழிலரசி (10), சந்திரலேகா(15). இவர்கள் மூவரும் சத்தியில் இருந்து பவானிசாகர் நோக்கி இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் - பவானிசாகர் சாலையில் அன்னூர் கவுண்டர் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கோவை கோட்டத்துக்கு உள்பட்ட சுங்கம் பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஒன்று சத்தியில் இருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்து.
பேருந்தை கோவையைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஓட்டினார். அரசுப் பேருந்தை இருசக்கர வாகனம் முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியது. இதில், பேருந்தின் சக்கரம் எழிலரசியின் தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கிருபைராஜ், சந்திரலேகா இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சந்திரலேகா உயிரிழந்தார். கிருபைராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து நடந்தபோது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. அந்தியூரை அடுத்த ஒலகடம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்பாபு (32), வனத் துறையில் வேட்டைத் தடுப்புக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர், பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது, விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் 200 மீ தொலைவில் வரிசையாக நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின் பகுதியில் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக, அவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவகுமார், விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.