வாசித்தல் என்பது மிகப் பெரிய தவம்: ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
வாசித்தல் என்பது மிகப் பெரிய தவம் என்று பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசினார்.
வாசித்தல் என்பது மிகப் பெரிய தவம் என்று பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசினார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தி சென்னை சில்க்ஸ் மேலாண்மை இயக்குநர் கே.விநாயகம் தலைமை வகித்தார். இதில், "ஆலந்தோப்பு' என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசியதாவது:
புத்தகம் என்பது இறைவன். வாசித்தல் என்பது மிகப் பெரிய தவம். அதனால் கிடைக்கும் புரிதலும், அறிதலும் வரங்கள். ஈரோட்டில் இருக்கும் மக்களுக்கு ஆண்டுதோறும் வரங்கள் வந்து வாய்த்துக் கொண்டிருக்கின்றன.
உலகத்தில் இருக்கும் இலக்கியங்களை நாம் எடுத்துப் பார்த்தால் அது மாந்தோப்பு, தென்னந்தோப்பு, புளியந்தோப்பாக இருக்கலாம். ஆனால், தமிழ் இலக்கியத்தை மட்டும்தான் ஆலந்தோப்பு என்று சொல்கிறோம். ஒவ்வொரு ஆலமரமும் ஒரு தோப்பாக மாறும் என்றால் அதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம்.
தொல்காப்பியம் முதல் இன்றைய இலக்கியம் வரை எவ்வளவோ நூல்கள் தமிழில் உள்ளன. ஆலந்தோப்புக்கு உரிமை உள்ளவர்களாக இருக்கும்போதும்கூட ஆங்கில மோகத்தால் என்று அச்சப்பட்டு ஆலாய்ப் பறக்கிறோம் என்பது வேதனையாக இருக்கிறது.
உங்களுடைய மனதில் உற்சாகம் வருவதற்காகவும், கவலைகள் மறையவும், தாழ்வு மனப்பான்மையைப் போக்கவும் எத்தனையோ புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால், அவற்றை எழுதியவர்கள் அத்தனை பேரும் சுய சிந்தனையை வளர்க்கும் புத்தகங்களைப் படித்தவர்கள் அல்ல. தமிழ் இலக்கியங்களை வாசித்து வந்ததால் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.
இலக்கிய வாசிப்பின் தரம் மேன்மை அடைய வேண்டும். அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இலக்கிய வாசகனாக கடுமையான பயிற்சி வேண்டும்.
சமுதாயச் சீரழிவைத் தடுக்கவும், தாழ்வு மனப்பான்மையைப் போக்கி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் கேடயமாவது புத்தகம். தனிமையைவிட்டு வெளியே வர ஆயுதம் புத்தகம். ஆகவே, புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், மு.வரதராசன், சுந்தர.ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் தேடித் தேடி வாங்கி நமது குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நாம் கொடுக்கக் கூடிய மிக அழகான உயில் புத்தகம்தான் என்றார்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 2 இல் புத்தகத் திருவிழா:
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பேசிய மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறுகையில், இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் வரவேற்பு அதிகமாக இருந்தது. மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.