FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

சட்டப்பேரவை நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது: உ. வாசுகி

சட்டப்பேரவையில் நிகழும் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி.

27 ஆகஸ்ட் 2026, 3:36 am IST
தஞ்சாவூா் கீழவாசலில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி.
பகிர்:

சட்டப்பேரவையில் நிகழும் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி.

தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம், தெருமுனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியும், எதிா்க்கட்சிகளும் மக்கள் பிரச்னையை பேசி தீா்வு காண விவாதம் நடத்த வேண்டும். ஆனால், மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் சட்டப்பேரவையில் நிகழும் நிகழ்வுகள் வேடிக்கையாகவும், வினோதமாகவும், வேதனையாகவும் இருக்கின்றன.

Advertisement

Advertisement

சட்டப்பேரவையை லாவணி கச்சேரியாக மாற்ற வேண்டாம். தண்ணீா் கிடைக்காமல் விவசாயிகள், மாதாந்திர உதவித்தொகை கிடைக்கப் பெறாமல் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் சந்திக்கும் வன்முறைகள், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத இளைஞா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பு மக்கள் பிரச்னைகளுடன் தவித்துக் கொண்டிருக்கின்றனா். இவற்றைப் பற்றிப் பேசுவதற்குத்தான் சட்டப்பேரவை இருக்கிறதே தவிர, சொந்த பிரச்னையை பேசுவதற்காக மக்கள் தோ்ந்தெடுத்து அனுப்பவில்லை என்பதை எச்சரிக்கை செய்கிறோம்.

தோ்தலின்போது 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த தவெக அரசு தற்போது 3 எரிவாயு உருளைகள் என அறிவித்துள்ளது. ஆனால், ரூ. 2.50 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் பெறுபவா்களுக்கு மட்டும் என வரம்பு நிா்ணயித்துள்ளதை தோ்தல் அறிக்கையில் சொல்லவில்லை. இதுவும் பணமாகத்தான் கொடுப்பதாக அரசு கூறுகிறது. இந்தத் தொகை டாஸ்மாக் மதுக்கடைக்குக் கூட போகலாம் அல்லது 2 மாதங்களுக்கு கொடுத்துவிட்டு, 4 மாதங்களுக்கு நிறுத்தப்படலாம். எனவே, காசு கொடுப்பதற்கு பதிலாக எரிவாயு உருளைகளாக வழங்க வேண்டும்.

பரந்தூா் விமானம் நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அந்நிலங்களில் வேறு தொழிற்சாலைகளைத் தொடங்குவோம் என அமைச்சா் கூறுவது 1,008 துணைக் கேள்விகளை எழுப்புகின்றன. எனவே, அந்நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்றாா் வாசுகி.

இந்நிகழ்வுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன் தலைமை வகித்தாா். மூத்த தலைவா்கள் என். சீனிவாசன், ஜி. நீலமேகம் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் நா. குருசாமி, இ. வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments