பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வாகனங்களில் மணல் கடத்தல்
பவானி ஆற்றின் இரு கரையோரப் பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் மணல் கடத்தப்படுவது மீண்டும் துணிகரமாக நடைபெறத் தொடங்கியுள்ளது.
பவானி ஆற்றின் இரு கரையோரப் பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் மணல் கடத்தப்படுவது மீண்டும் துணிகரமாக நடைபெறத் தொடங்கியுள்ளது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர் அணை நிரம்பியதால் திறக்கப்பட்ட உபரி நீரால் கடந்த இரு வாரங்களாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அடித்து வரப்பட்ட மணல் ஆங்காங்கே திட்டுத் திட்டாகப் படிந்து காணப்படுகிறது.
இந்நிலையில், உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, தற்போது பாசனத்துக்கும், குடிநீருக்கும் மட்டுமே பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதால் மிகக் குறைந்த அளவே தண்ணீர் ஓடுகிறது. இதனால், கரையோரப் பகுதிகளில் மீண்டும் மணல் திருட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது.
பவானி காலிங்கராயன் அணைக்கட்டு தொடங்கி இரு கரைகளிலும் தேங்கியுள்ள மணலைக் கடத்திச் செல்லும் வகையில் வழித்தடங்கள் ஏற்படுத்துதல், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் முன்னதாகவே பிளாஸ்டிக் உர பைகளில் மணலை கட்டி வைக்கும் இக்கும்பல் வாகனங்களுடன் வந்து மணலை ஏற்றிச் செல்கிறது.
ஜம்பை பகுதியில் இரவு, பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடத்திச் செல்லப்படும் மணல் மூட்டைகள் தொலைவுக்கேற்ப ரூ. 75 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு வருவதற்குள் ஆற்றுக்குள் இறங்கும் வாகனம் தப்பிச் செல்லும் வகையில் மணல் திருடர்கள் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றுக்குள் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. இதனால், மணல் திருடர்கள் உடனடியாக தப்பிச் செல்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு பவானி ஆற்றையும், இயற்கை அளித்துள்ள கொடையான மணலையும் பாதுகாக்க சிறப்பு தனிப்படைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.