FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய த.மா.கா. வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி பொதுமக்கள் 13 பேரின் சாவுக்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ் மாநில

Updated On : 25 மே 2018, 12:48 am IST
பகிர்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி பொதுமக்கள் 13 பேரின் சாவுக்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநிலத்தலைவர் எம். யுவராஜா கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு த.மா.கா. சார்பில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞரணி மாநிலத் தலைவர் எம். யுவராஜா கூறியது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசின் காவல் துறைக்கு த.மா.க. கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவக்களைக் கைது செய்ய வேண்டும். இதற்குக் காரணமான காவல் துறை இயக்குநரை பணி நீக்கம் செய்ய வேண்டும். கலவரத்தில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட 318 பேரையும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி தரமான சிகிச்சை அளிக்க அரசு முன் வர வேண்டும்.
அரசின் தவறை மறைப்பதற்காக தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணைய தள சேவையை முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேவைப்பட்டால் துணை ராணுவம் வரவழைக்கப்படும் என்பது தவறான நடைமுறை. இதை அனுமதிக்கக்கூடாது.
தூத்துக்குடி மக்களின் நூறு நாள் போராட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது. அதன் காரணமாகவே நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது. இதில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோரை இடமாற்றம் செய்வதால் பிரச்னை தீர்ந்து விடாது.
இப்பிரச்னையைத் தீர்க்க தமிழக முதல்வரோ அல்லது அமைச்சர்களோ முன் வரவில்லை. எனவே, தமிழக ஆளுநரும், மத்திய அரசும் இப்பிரச்னையில் தலையிட்டு சரி செய்ய வேண்டும். மக்கள் நம்பிக்கையை இழந்த தமிழக அரசு தானாகவே முன் வந்து பதவி விலக வேண்டும். முன்னெப்போதும் இல்லாத வகையில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதால், இந்த அரசு நீடிக்க எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்றார்.
மத்திய மாவட்டத் தலைவர் பி. விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி. சந்திரசேகர், துணைத் தலைவர் ஆறுமுகம், விவசாய அணித் தலைவர் சம்பத், நிர்வாகிகள் மாயா, சத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments