சென்னிமலை முருகன் கோயிலுக்கு வந்த திருமண கோஷ்டியினரின் வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்
சென்னிமலை முருகன் கோயிலுக்கு வந்த திருமண கோஷ்டியினரின் வேன் கவிழ்ந்து 6 பேர் காயமடைந்தனர்.
சென்னிமலை முருகன் கோயிலுக்கு வந்த திருமண கோஷ்டியினரின் வேன் கவிழ்ந்து 6 பேர் காயமடைந்தனர்.
சென்னிமலையை அடுத்த கூரபாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் வியாழக்கிழமை காலை 8 மணியளவில், சென்னிமலை முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதற்காக மணமக்களின் உறவினர்கள் 2 வேன்களில் முருகன் கோயிலுக்கு வந்தனர். திருமண நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு காலை 9.30 மணியளவில் முருகன் கோயிலில் இருந்து புறப்பட்டு மணமகன் ரஞ்சித்குமார் ஊரான கூரபாளையம் சென்றுவிட்டு, பிறகு திருப்பூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக கோயிலில் இருந்து அடிவாரத்தை நோக்கி 2 வேன்களிலும் வந்து கொண்டிருந்தனர்.
முதலில் வந்த வேனை முத்தூரைச் சேர்ந்த சேகர் (24) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வேனில் மணமக்களின் உறவினர்கள் சுமார் 25 பேரும், பின்னாடி வந்த வேனில் மணமக்கள் உள்பட பலரும் இருந்தனர். அப்போது, ஒரு வளைவில் திரும்பும்போது முதலில் வந்த வேன் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தார் சாலையை விட்டு அருகில் இருந்த புதருக்குள் சென்றுவிட்டது.
இந்த விபத்தில், திருப்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (60), கூரபாளையத்தைச் சேர்ந்த ஆண்டவன் (50), சண்முகம் (45), குருவாள் (60), ஜோதி (55), திருப்பூரைச் சேர்ந்த ரவி (55) ஆகிய 6 பேரும் காயமடைந்தனர். பின்னர், இவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து, சென்னிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.