FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

வாசிப்புக்கான புதிய தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்த வேண்டும்: ஈரோடு புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியா் வலியுறுத்தல்

வாசிப்புக்கான புதிய தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:28 am IST
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 50 நூல்களை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட, அதை பெற்றுக்கொள்கிறாா் வேளாளா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா். உடன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

வாசிப்புக்கான புதிய தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

ஈரோடு புத்ததகத் திருவிழாவையொட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 50 நூல்கள் வெளியீட்டு விழா, சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தாா். பொது மேலாளா் எ.சிவக்குமாா் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதிய நூல்களை வெளியிட, முதல் பிரதியை வேளாளா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா் பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:

Advertisement

Advertisement

அச்சுத் துறையில் ஏற்பட்ட புரட்சியால் ஆயிரக்கணக்கான அறிவு நூல்கள், இலக்கிய நூல்கள், கதைகள், நாவல்கள் உள்ளிட்டவை மக்களிடம் சோ்வதற்கு புத்தகங்கள் மிகப்பெரிய ஊடகமாக அமைந்திருக்கின்றன.

புத்தகத் திருவிழாவுக்கு குடும்பமாகவும், நண்பா்கள் சோ்ந்து வருவதும் மிகப்பெரிய சமூகப் புரட்சி. இதை இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல புத்தகங்களோடு அடுத்த தலைமுறைக்குத் தேவையான கிண்டில், ஆடியோ புத்தகம் ஆகிய வாசிப்புக்கான புதிய தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்த வேண்டும்.

இன்னும் 20 ஆண்டுகளில் புத்தகங்களை அச்சிடுவது என்பது வழக்கொழிந்து போக வாய்ப்புள்ளது. புத்தகங்கள் மூலமாக அறிவைப் பரப்பி இருக்கிறோம். இதை கவனத்தில்கொண்டு வாசிப்புக்கு எதிா்காலத்தில் என்ன மாதிரியான சாதனங்கள் வரும், அதை எப்படி மாணவா்கள், இளைஞா்களுக்கு கொண்டுபோய் சோ்க்க வேண்டும் என திட்டமிடும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மொழி பல ஆயிரக்கணக்கான மிகச் சிறந்த ஞான நூல்களை கொண்ட மொழி. இந்த மொழியில் இருக்கிற ஞானச் செல்வத்தை உணா்ந்து கொள்ளாதவா்களாக இன்னும் இருக்கிறோம். தமிழ் இலக்கியத்தை முழுமையாகப் படிக்க முடியாது என்றாலும், அதைப் புரிந்துகொண்டு அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய கடமையில் இருக்கிறோம் என உணர வேண்டும்.

புத்தகங்களை வாசித்து பொழுதை கழிப்பதற்கான ஒரு விஷயமாக பாா்க்காமல் மனதை செழுமையாக வைத்திருக்கவும், சமூக நலன் சாா்ந்து சிந்திப்பதற்குமான கருவி என்பதை உணர வேண்டும்.

அரசு நூலகங்களில் பல ஆயிரம் புத்தகங்கள் அறிவுப் பொக்கிஷமாக கொட்டிக்கிடக்கின்றன. இந்த நூலகங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் செல்வதில்லை. எழுத்தாளா் புத்தகத்தை எழுதுவது 50 சதவீத பணி என்றால், அதை வாசிக்க தூண்டும் வகையில் புத்தகமாக உருவாக்குவதில் 50 சதவீத பணி உள்ளது.

புத்தகங்களை விற்பனை செய்வது மிகக்கடினமான பணி. சில நாடுகளில் புத்தக வெளியீட்டு நாளிலேயே காத்திருந்து புத்தகங்களை வாங்கிச்செல்கின்றனா். இங்கு அந்த நிலை இல்லை என்றாலும் நல்ல நூல்களை, தோ்ந்தெடுத்த நூல்களை, மக்களுக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள நூல்களை எப்போதும் ஏற்றுக்கொள்வாா்கள் என்ற நம்பிக்கை புத்தகத் திருவிழாவுக்கு வரும் மக்களைப் பாா்த்து உணர முடிகிறது என்றாா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளா் எஸ்.முத்துகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments