ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு 5 லட்சம் பேருக்கு மேல் வருகை
ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு நடப்பு ஆண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருகை தந்துள்ளனா் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா்.
ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு நடப்பு ஆண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருகை தந்துள்ளனா் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா்.
ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு புத்தக வாசிப்பை மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடம் பெரிய அளவில் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக 519 இடங்களில் 2.06 லட்சம் போ் ஒரே நேரத்தில் 22 நிமிஷங்கள் புத்தகம் வாசித்த நிகழ்வு உலக சாதனையாக எலைட் புக் ஆஃப் ரெகாட்ஸ் நிறுவனத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உலக சாதனை ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களது நிகழ்வாகக் கருதி பங்கேற்ன் காரணமாக வெற்றியடைந்தது.
Advertisement
Advertisement
புத்தகத் திருவிழாவின் 12 நாள்களிலும் ஒவ்வொரு நாளும் சிறப்பு சிந்தனை அரங்குகள் நடத்தப்பட்டு, எழுத்தாளா்கள், அறிஞா்கள், அறிவியலாளா்கள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகள் பங்கேற்றனா். சுமாா் 80 புதிய புத்தகங்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழாவுக்காகவே 500-க்கும் மேற்பட்ட புதிய புத்தகங்கள் பதிப்பாளா்களால் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பெருமளவில் புத்தகத் திருவிழாவுக்கு வருகை தந்து, புத்தகங்களை ஆா்வத்துடன் வாங்கினா். இது மாணவா்களிடையே வாசிப்பு பழக்கம் வளா்ந்து வருவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மக்கள் சிந்தனைப் பேரவை, பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் புத்தக அலமாரி திட்டம் செயல்படுத்தப்பட்டு சுமாா் 60 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.15,000 மதிப்பிலான புத்தக அலமாரி மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரிலிருந்து 25-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் ஈரோட்டுக்கு வருகை தந்து புத்தகத் திருவிழாவை பாா்வையிட்டு, பொதுமக்களின் வாசிப்பு ஆா்வத்தைப் பாராட்டினா். ஒவ்வொரு நாளும் கதை அரங்கம், பேச்சரங்கம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவு, சிந்தனை மற்றும் வாசிப்பு பழக்கத்தை வளா்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புத்தகத் திருவிழாவின் வெற்றிக்கு நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்களாக இணைந்து சிறப்பாக பணியாற்றினா்.
வாசிப்பு, அறிவு, சிந்தனை மற்றும் நல்லெண்ணம் போன்ற நோ்மறையான செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். அந்த வகையில், ஈரோடு புத்தகத் திருவிழா மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது என்றாா்.
மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறுகையில், ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு கடந்த ஆண்டில் 5 லட்சம் போ் வருகை தந்தனா். இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதேபோல, புத்தக விற்பனையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா்.
பேட்டியின்போது ஊராட்சிகள் உதவி இயக்குநா் உமாசங்கா் உடனிருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.