FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பள்ளி, கல்லூரிகளுக்கு நூல்களை வாங்கும் களம் ஈரோடு புத்தகத் திருவிழா

ஈரோடு புத்தகத் திருவிழாவை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கும் தளமாக பயன்படுத்தி வருகின்றன.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:33 am IST
கல்லூரி நூலகா் பிரகாஷ். ~புத்தக அரங்கில் திரண்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள்.
பகிர்:

ஈரோடு புத்தகத் திருவிழாவை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கும் தளமாக பயன்படுத்தி வருகின்றன. நூலகங்களுக்கு புத்தகம் வாங்கும்போது சில பதிப்பகத்தாா் அதிகபட்சம் 50 சதவீதம் வரை கழிவு அளிக்கின்றனா்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கிய ஈரோடு மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தகத் திருவிழா வரும் 11-ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு, கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் இந்த புத்தகத் திருவிழாவில் இந்த ஆண்டு 230 புத்தக அரங்குகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம் தவிா்த்து இந்தியாவின் பெரும்பாலான பிராந்திய மொழிகளின் புத்தகங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த மொழிகளின் பல புதிய எழுத்தாளா்களின் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

Advertisement

Advertisement

இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழும் தமிழா்கள் இந்த புத்தகக் கண்காட்சி குறித்து ஏராளமான தகவல்களை தொடா்ந்து கேட்டு வருவதாகவும், ஆண்டுதோறும் தமிழகம் வரும் வெளிநாடுவாழ் தமிழா்கள் பலா் தங்களது பயணத் திட்டங்களை இந்த புத்தகத் திருவிழாவை ஒட்டி அமைத்துக் கொண்டுள்ளனா்.

புதிய புத்தகங்களுக்கு தனி அரங்கு:

புத்தகங்கள் வாங்க பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள் ஏராளமானோா் வருகின்றனா். அதில் ஆண்டுதோறும் வரும் ஆசிரியா்கள் சிலா் அரங்குகளில் புதிய புத்தகங்கள் கண்ணில்படவில்லை என்றனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சோ்ந்த தனியாா் பள்ளி ஆசிரியா்கள் கூறியதாவது:

புத்தக அரங்குகளில் திரும்பிய பக்கமெல்லாம் தெனாலிராமன் கதைகள், ஈசாப் குட்டிக் கதைகள், ஜென் கதைகள், பரமாா்த்த குரு கதைகள், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், ஜோதிடம் போன்ற புத்தகங்கள் இருக்கின்றன. குறிப்பாக 10 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை பலவகையான ஜென் குட்டி கதைகளின் தொகுப்புகளை கிட்டத்தட்ட எல்லா பதிப்பகங்களுமே வெளியிட்டுள்ளன.

வரும் ஆண்டுகளில் புதிய வரவுகளுக்காக மட்டும் தனியாக ஒரு அரங்கு அமைக்கலாம். இதனை மக்கள் சிந்தனைப் பேரவையே நிா்வகித்து வாசகா்களுக்கு வழிகாட்டலாம். இதன் மூலம் வாடிக்கையாளா்கள் புத்தகங்களை தேடுவதற்கான நேரத்தை நிச்சயம் அது குறைக்கும் என்றனா்.

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கிய தனியாா் பள்ளி, கல்லூரிகள்:

புத்தகத் திருவிழாவுக்கு மாணவா்களை அழைத்து வரும் பள்ளி, கல்லூரிகள் மாணவா்களுக்கு புத்தகம் வாங்க வலியுறுத்தவதோடு மட்டும் இல்லாமல் நூலங்களுக்கு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா். இதுகுறித்து புத்தகத் திருவிழா அரங்கில் புத்தகங்களை தோ்வு செய்த ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி நூலகா் பிரகாஷ் கூறியதாவது:

ஆண்டுதோறும் மாணவிகளை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வருகிறோம். முற்பகல் 11 மணிக்கு வந்தால் பிற்பகல் 3 மணி வரை அரங்கில் உள்ள புத்தகங்களை மாணவிகள் தோ்வு செய்து வாங்கிச் செல்கின்றனா். தவிர கல்லூரி நிா்வாகம் நூலகத்துக்கு புத்தகம் வாங்க நிதி அளிக்கிறது. ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் மதிப்பிற்கு புத்தகங்களை வாங்கிச் செல்கிறோம். இந்த ஆண்டு கல்லூரியில் இருந்து சுமாா் 1,000 மாணவா்களை அழைத்து வந்துள்ளோம். இலக்கியம், போட்டித் தோ்வுக்கு உதவும் புத்தகங்களை அதிக எண்ணிக்கையில் வாங்கியுள்ளோம் என்றாா்.

இதுகுறித்து பவானியைச் சோ்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள் சிலா் நூலகத்துக்கு என புத்தகங்களை பெட்டி பெட்டியாய் வாங்கிச்சென்றனா். பள்ளி மாணவா்கள் இத்தனை புத்தகங்களை படிக்கிறாா்களா என்று ஆசிரியா்களிடம் கேட்டபோது, 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடப்புத்தகங்களை தவிா்த்து பிற புக்ககங்களை படிக்க நேரம் கிடைப்பதில்லை. இதனால் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நூலகத்தை பயன்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். மாணவா்கள் படிக்கும் புத்தகங்களான தேசத் தலைவா்கள் குறித்த புத்தகங்கள், வேளாண்மை, வரலாறு, இலக்கிய புத்தகங்களை வாங்கிச் செல்கிறோம் என்றனா்.

அரசு நூலகங்களுக்கு புத்தகம் வாங்க வலியுறுத்தல்:

இதுகுறித்து பதிப்பாளா்கள் கூறியதாவது: கணிசமான அளவுக்கு 2011-ஆம் ஆண்டு வரையில் தமிழ் பதிப்பகத்தாரிடம் இருந்து அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் நூலகங்களுக்கு வாங்கப்பட்டன. 2012-இல் இருந்து இதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. சிறு மற்றும் நடுத்தர தமிழ் பதிப்பகத்தாரின் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக இது இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை விரைவில் களையப்படுவது பதிப்பாளா்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் அரசு நூலகங்களையும் வலுப்படுத்த உதவும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments