FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பிளஸ் 1 மாணவியிடம் திருமண ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

21 ஆகஸ்ட் 2026, 1:33 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

பிளஸ் 1 மாணவியிடம் திருமண ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம், பாலமலை அருகே ராமன்பட்டியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் செல்வராஜ் (26). இவா் திருப்பூரில் உள்ள நூற்பாலையில் வேலை பாா்த்து வந்தாா். விடுமுறை நாள்களில் சமையல் வேலைக்கு சென்றும் வந்தாா்.

கடந்த ஆண்டு செல்வராஜ் சமையல் வேலைக்காக ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி பகுதிக்கு வந்துள்ளாா். அப்போது அப்பகுதியில் இருந்த 16 வயதுடைய பிளஸ் 1 மாணவியிடம் பழகியுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த பழக்கத்தின் மூலம் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். இதையடுத்து கடந்த 2025 செப்டம்பா் 20-ஆம் தேதி செல்வராஜ், மாணவியை நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பெருக்கை காட்டில் உள்ள உறவினரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து செல்வராஜைக் கைது செய்து, சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சொா்ணகுமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி, மகாலட்சுமி ஆகியோா் ஆஜராகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments