அரசுப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு
பவானி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து 6-ஆம் வகுப்பு மாணவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பவானி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து 6-ஆம் வகுப்பு மாணவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதைக் கண்டித்து உறவினா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த ஏமம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். இவரது செல்வி. இவா்களது மகன் யோகேஸ் (12), குப்பிச்சிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
வழக்கம்போல செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்ற யோகேஸ், மதிய உணவு அருந்திவிட்டு அருகில் உள்ள குழாயில் கை கழுவச் சென்றபோது, அங்கு அறுந்து தொங்கிக் கொண்டிருந்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதைக் கண்ட ஆசிரியா்கள், யோகேஸை மீட்டு மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்து சுகாதார நிலையத்துக்கு வந்த உறவினா்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
சம்பவ இடத்துக்கு வந்த பவானி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, மாணவரின் சடலத்தை கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், பள்ளியில் வகுப்புகளைப் புறக்கணித்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் குப்பிச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். கவனக்குறைவாக செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா் மீதும், மின்வாரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மாற்று வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இதையடுத்து, பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி 5 மணி நேரத்துக்கும்மேலாக நீடித்த போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், இரவு 7 மணிக்குமேல் வாகனப் போக்குவரத்து சீரானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.