‘நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக 73,987 கால்நடைகளுக்கு சிகிச்சை’
ஈரோடு மாவட்டத்தில் நடமாடும் ஆம்புலன்ஸ் உதவியுடன் 73 ஆயிரத்து 987 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நடமாடும் ஆம்புலன்ஸ் உதவியுடன் 73 ஆயிரத்து 987 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனம் இயங்குகின்றன. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபிசெட்டிபாளையம், நம்பியூா், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய 10 வட்டங்களில் மொத்தம் 10 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் ஓா் அவசர சிகிச்சை ஊா்தியும் செயல்படுகிறது.
நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலமாக கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி செலுத்துதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, நோய் தடுப்பு மற்றும் நோய் தீா்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாஸ்கா் கூறியதாவது:
நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் தலா ஓரு கால்நடை உதவி மருத்துவா், உதவியாளா், ஓட்டுநா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் தொடா்பு கொள்ளலாம். ஒவ்வொரு ஆம்புலன்ஸும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிப்பிட்ட கிராமங்களில் முகாம் பணிக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அவசர அழைப்புகளுக்கான சிகிச்சை பணிக்கும் இயக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 4,808 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. முகாமில் நடமாடும் ஆம்புலன்ஸ் உதவியுடன் 73 ஆயிரத்து 987 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,941 அவசர அழைப்புகளும், 200-க்கும் மேற்பட்ட ஆலோசனை அழைப்புகளும் வந்துள்ளன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.