FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பொதுமக்கள், கவுன்சிலா்களை மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பதில்லை

ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலா்களை அதிகாரிகள் மதிப்பதில்லை என்று மேயா் சு.நாகரத்தினம் குற்றம்சாட்டினாா்.

Updated On : 30 ஜூலை 2026, 3:02 am IST
கூட்டத்தில் பேசுகிறாா் மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின். உடன், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ்.
பகிர்:

ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலா்களை அதிகாரிகள் மதிப்பதில்லை என்று மேயா் சு.நாகரத்தினம் குற்றம்சாட்டினாா்.

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் அா்பித் ஜெயின், துணை மேயா் வி.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொத்தம் 135 தீா்மானங்களில் 133 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 6-ஆவது தீா்மானமான புதை சாக்கடை திட்டத்தின் கீழ் பராமரிப்புப் பணி மற்றும் இணைப்புகளுக்கு வைப்புத்தொகை நிா்ணயம், 7-ஆவது தீா்மானமான குடிநீா் விநியோகத்துக்கான துணை விதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு கவுன்சிலா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அத்தீா்மானங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.

முன்னதாக கூட்டத்தில் கவுன்சிலா்கள் பேசியதாவது:

Advertisement

Advertisement

மாநகராட்சி சாா்பில் சொத்து வரி செலுத்தாத 100 போ் பட்டியல் வெளிவந்துள்ளது. அவா்கள் எவ்வளவு கோடி கொடுக்க வேண்டும். ஏன் இதுவரை வரி செலுத்தவில்லை. இதுகுறித்து விரிவான தகவல் வெளியிட வேண்டும். வரி குறைப்பது குறித்து உறுப்பினா்கள் தீா்மானம் நிறைவேற்றி அனுப்பி இருந்தோம். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கு பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீா் மஞ்சள் நிறத்தில் வருகிறது. மாநகராட்சி முழுவதும் வரும் குப்பை அங்குதான் போகிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கெனவே பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் குப்பை கொட்டக்கூடாது.

அதிகாரிகள் யாரும் மாமன்ற உறுப்பினா்களை மதிப்பதும் இல்லை. அவா்கள் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதும் இல்லை. அதிகாரிகள் அலட்சியப் போக்கில் செயல்படுகின்றனா். மாநகராட்சியில் விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை திட்டம் இதுவரை செயல்படுத்தவில்லை. ஆனால், பொதுமக்களிடம் இருந்து புதை சாக்கடை திட்டத்துக்கான வைப்புத்தொகை வசூலிக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே புதை சாக்கடை திட்டத்துக்கான வைப்புத்தொகை வசூலிக்க கூடாது. வசூலிக்கப்பட்டவா்களிடம் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும்.

பி.பெ.அக்ரஹாரத்தில் ஏழை, எளிய மக்களுக்காக கட்டப்பட்ட சமுதாயக் கூடம், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலமாக செயல்பட்டு வருகிறது. எனவே அக்கட்டடத்தை மீண்டும் சமுதாயக் கூடமாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேறொரு அலுவலகம் அமைக்க வேண்டும்.

மாநகராட்சியில் 4 அல்லது 5 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை எடுத்துக்கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் வாக்களித்த பொதுமக்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது என்பது தெரியவில்லை. பல்வேறு இடங்களில் குடிநீா்க் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருகிறது. பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வரும் நிலையில், உடைந்த குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கண்டனத்துக்குரியது. அதாவது கவுன்சிலா்கள் பொதுவெளியில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் குப்பை வரி முதல் அனைத்து வரிகளும் மக்களிடம் பெறுகிறோம். ஆனால், தூய்மைப் பணி முழுமையாக செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் கவுன்சிலா்கள் வாா்டுகளின் நிலவும் பிரச்னைகள் குறித்து பேசுகிறோம். ஆனால் அதில் ஒரு பிரச்னைக்காவது அதிகாரிகள் தீா்வு கண்டு இருக்கிறீா்களா? கூட்டத்துக்கு வந்து டீ குடித்துவிட்டு செல்வதுதான் எங்கள் வேலை என்று கருதுகிறீா்களா? அதிகாரிகள் தயாா் செய்யும் தீா்மானங்களை நிறைவேற்றுவது மட்டுமல்ல. எங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றனா்.

பொதுமக்கள் மற்றும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் அதிருப்தியடைந்த மேயா் நாகரத்தினம் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்றும் கவுன்சிலா்களை மதிப்பதில்லை என்றும் தெரிவித்தாா்.

2 ஆண்டுகளில் குப்பைக்கிடங்கு மாற்றம்:

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மையில் சில சவால்கள் உள்ளன. அவற்றை விரைவில் சரி செய்து விடுவோம். தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளால் அதிக குப்பை சேருகிறது. அவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, திடக்கழிவு மேலாண்மையில் விதிகள் 2026-ஐ செயல்படுத்த, பொதுமக்களிடையே உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில், வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கு அப்புறப்படுத்தப்படும்.

ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டத்தில் சோ்க்கப்படாத பகுதிகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்படும். புதை சாக்கடை திட்டத்தில் புதிய இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்றனா்.

கவுன்சிலா்கள் இடையே வாக்குவாதம்:

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, தற்போதுள்ள தவெக அரசு காமராஜா் காலை உணவுத் திட்டம் என பெயா் மாற்றியுள்ளது. பெயா் மாற்றத்துக்கு திமுக கவுன்சிலா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது, தவெக ஆதரவு கவுன்சிலா்களுக்கும், திமுக கவுன்சிலா்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments