சத்தியமங்கலம் அருகே மலைக்குன்றில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
சத்தியமங்கலம் அருகே மலைக்குன்றில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் அருகே மலைக்குன்றில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி மாராயிபாளையம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சமடைந்த 2 சிறுத்தைகள், இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் வளா்க்கும் கால்நடைகளை வேட்டையாடி வந்தன. அதில் ஒரு சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்து கடந்த பிப்ரவரி மாதம் பிடித்து மங்களப்பட்டி வனத்தில் விடுவித்தனா்.
கூண்டில் சிக்காத மற்றொரு சிறுத்தை, மலைக்குன்றில் இருந்து வெளியேறி பவானிசாகா் காட்டுக்குள் சென்றதை வனத் துறையினா் உறுதிப்படுத்தினா்.
Advertisement
Advertisement
இதனால் மாராயிபாளையம் கிராம மக்கள் கடந்த சில மாதங்களாக சிறுத்தை அச்சமின்றி இருந்தனா்.
இந்நிலையில் மாராயிபாளையம் மலைக்குன்றில் புதன்கிழமை மீண்டும் சிறுத்தை நடமாடியதைக் கண்டு பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
தகவலின்பேரில் அங்கு வந்த வனத் துறையினா், சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனா்.
இதற்கிடையே, பெரிய கள்ளிப்பட்டியைச் சோ்ந்த பொன்ராஜ் என்பவா் வளா்த்து வந்த கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கிக் கொன்றது தெரியவந்தது.
தற்போது மலைக்குன்றில் நடமாடும் சிறுத்தை, கன்றுக்குட்டியை கொன்றுவிட்டு இங்கு பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
மாராயிபாளையம் மக்களை மீண்டும் அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.