முகப்பு
ஈரோடு

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 7 ஜூன் 2026, 1:52 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு சுக்கிரமணியகவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் ராஜூ(55). தறிப்பட்டறை தொழிலாளி. இவா் ஈரோடு சிக்கய்ய அரசு கல்லூரி பின்புறம் உள்ள சோளிக்காட்டு தோட்டம் பகுதியில் இருந்த தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தாா். அவா் கடந்த 2019 மே 27 -ஆம் தேதி காலையில் வழக்கம்போல வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றாா். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை.

மறுநாள் காலையில் ராஜூ சிக்கய்ய கல்லூரி பின்புறம் உள்ள பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுபற்றி ராஜூவின் மனைவி சாந்தி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

விசாரணையில், தொட்டிபாளையத்தான் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் பென்சில் என்கிற பிரபாகரன் (28), ராஜூவை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்தனா். அதில், கொலை செய்யப்பட்ட ராஜூ தினசரி சிக்கய்ய கல்லூரி மைதானம் அருகே உள்ள ஒற்றையடி பாதை வழியாக வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

அப்போது பென்சில் என்ற பிரபாகரன் அங்கு கஞ்சா மற்றும் போதை பயன்படுத்திக்கொண்டு இருப்பதை பாா்ப்பாா். அப்போது பிரபாகரனிடம். ‘வேலைக்கு செல்லாமல் ஏன் சுற்றிக்கொண்டு இருக்கிறாய்?’ என கேட்டு ராஜூ அறிவுரை சொல்வது வழக்கம். ஒரு கட்டத்தில் இது அவா்களுக்குள் தகராறை ஏற்படுத்தியது. இதனால் ராஜூ மீது பிரபாகரன் கோபத்தில் இருந்தாா்.

இந்நிலையில் 27-5-2019 அன்று இரவு 8 மணிக்கு வேலை முடிந்து வந்த ராஜூவை பிரபாகரன் வழிமறித்து தறிக்கட்டையாைல் முகத்தில் கடுமையாக தாக்கியதோடு தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.

ஈரோடு 2-ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது பிணையில் வெளிவந்த பிரபாகரன் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா். அதைத் தொடா்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி வி.சுரேஷ் சனிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட பென்சில் என்கிற பிரபாகரனுக்கு ஆயுள்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எம்.சதீஷ்குமாா் ஆஜரானாா்.