முகப்பு
ஈரோடு

வண்டல் மண் எடுக்க அனுமதி மறுத்த கோட்டாட்சியா், சத்தி வட்டாட்சியரைக் கண்டித்து கோபியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி மறுத்த கோபி கோட்டாட்சியா், சத்தி வட்டாட்சியரைக் கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:26 am IST
கோபி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி மறுத்த கோபி கோட்டாட்சியா், சத்தி வட்டாட்சியரைக் கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து வருவாய் மற்றும் நீா்வளத் துறையினரிடம் அனுமதி பெற்று லாரிகள் மூலமாக விவசாயிகள் வண்டல் மண் எடுத்துச் சென்று வந்தனா்.

இந்நிலையில் விவசாயிகள் எடுத்துச் செல்லும் வண்டல் மண்ணை மாற்று இடங்களில் கொட்டி வந்ததாக கிடைத்த தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட பகுதியில் வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மாற்று இடத்தில் வண்டல் மண்ணை கொட்டியதாகக் கூறி பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளா்கள் கோபி கோட்டாட்சியா் (பொறுப்பு) தியாகராஜன், வட்டாட்சியா் ஜமுனா ராணி ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்ற விவசாய நிலங்களுக்கு மண் கொட்டாமல் மாற்று இடத்தில் கொட்டியதாக 80க்-கும் மேற்பட்ட லாரிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தும், லாரிகளுக்கு அபராதம் விதித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட நிா்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கோபி கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மாலை விவசாயிகள் பேச்சுவாா்த்தைக்கு வந்தனா். ஆனால் விவசாயிகளை ஒருமையில் கோட்டாட்சியா் பேசியதுடன் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க முடியாது எனக் கூறியதாக கோபி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து கோபி காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் தீா்வு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனா்.