FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

விலையில்லா வேட்டி, சேலைகள் உற்பத்திக்கு விரைவில் அரசாணை! அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தகவல்

கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி. - கோப்புப் படம்
பகிர்:

விலையில்லா வேட்டி, சேலைகள் உற்பத்திக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

முதல்வா் ச.ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சாா்பில் பள்ளிக் குழந்தைகள், தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கைத்தறித் துறை அமைச்சா் விஜய் எம்.பாலாஜி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் கேட்பது துறை சாா்ந்த கேள்விகளாக இல்லை. சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்கின்றனா். கடந்த ஆண்டு செய்த தவறுகளை மறைக்க புதிது புதிதாக பிரச்னைகளை உருவாக்கி வருகின்றனா். அவா்களின் கேள்விகளுக்கு அமைச்சா்கள்தான் பதிலளிக்கின்றனா். கொளத்தூரில் தவெக தலைவா் பேசியதால் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும். மக்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.

சட்டப்பேரவையில் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது. மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பான தீா்மான திருத்தத்தை ஏற்க முடியாது என அரசியலுக்காக எடப்பாடி கே.பழனிசாமி பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அனைத்து எம்எல்ஏ-க்களும் மேக்கேதாட்டு அணை கட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணி எப்போதும் காலதாமதமாக இருக்கும். ஆனால் இந்த முறை விரைந்து உற்பத்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பஅட்டைதாரா்களுக்கு தரமான விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு உற்பத்தி செய்த வேட்டி, சேலை எண்ணிக்கை குறித்து கணக்கீடு செய்ய இருக்கிறோம். அதை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விலையில்லா வேட்டி, சேலைகள் உற்பத்திக்கான அரசாணை விரைவில் வெளியாகும்.

விசைத்தறித் தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுதொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments