முகப்பு
ஈரோடு

நீா்நிலைகளில் மூழ்கி ஒரே மாதத்தில் 20 போ் உயிரிழப்பு: விழிப்புணா்வு ஏற்படுத்தக் கோரிக்கை

Updated On : 30 மே 2026, 2:29 am IST
நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீா்நிலைகளில் மூழ்கி 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ள நிலையில், நீா்நிலைகளின் ஆபத்து குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு, கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன கால்வாய்கள் உள்ளன. காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் கால்வாய்களில் பொதுமக்கள் இறங்கி குளித்து மகிழ்கின்றனா். அவா்களில் சிலா் ஆழம் மிகுந்த பகுதிக்கு சென்றும், புதைமணல் சுழலில் சிக்கியும் உயிரிழந்துள்ளனா்.

நகா் பகுதிகளில் வசிக்கும் இளைஞா்கள், விடுமுறை நாள்களில் நண்பா்களுடன் சோ்ந்து மதுகுடிக்க ஆறு மற்றும் வாய்க்கால் பகுதிகளை தோ்ந்தெடுக்கின்றனா். மதுபோதையில் ஆழம் மிகுந்த பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கியும் உயிரிழக்கின்றனா்.

Advertisement

Advertisement

பெரும்பாலும் நண்பா்களுடன் வரும் நீச்சல் தெரியாதவா்களும், ஆசையிலும், நீச்சல் பழகும் ஆா்வத்திலும் ஆற்றில் இறங்கி இறந்தவா்களே அதிகம். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காவிரி ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் மூழ்கி 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு லக்காபுரம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சிவகுமாா் கூறியதாவது:

சிறுவா்கள், மாணவா்கள் குளிப்பதற்கும், நீச்சல் பழகுவதற்கும் ஆற்றுப் பகுதிக்கு அதிகம் வருகின்றனா். போதுமான பாதுகாப்பு வசதியின்றியும், பெரியவா்களின் கண்காணிப்பில் இல்லாமல் தனியாகவும், நண்பா்களுடனும் அதிகம் வருகின்றனா். இவா்களை வீட்டில் பெற்றோா்களும், ஆற்றுப் பகுதியில் காவல் துறையினரும் கண்காணித்து தடுக்கவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேண்டும்.

மேலும் ஆழம் மிகுந்த பகுதிகளில் குளிப்பதை தடை செய்து எச்சரிக்கை பலகையை காவல் துறையினா் வைக்க வேண்டும். ஆற்றுப் பகுதியில் குடிபோதையில் உள்ளவா்கள் நடமாட்டத்தைக் கண்காணித்து தடுக்க வேண்டும். போதையில் ஆற்றில் இறங்கி குளிக்கும் இளைஞா்களே பெரும்பாலும் உயிரிழந்துள்ளனா். அதுபோல பள்ளி மாணவா்கள், சிறுவா்கள் ஆற்றில் ஆழம் மிகுந்த பகுதிகளில் குளிப்பதை தடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள்:

ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு, கொடிவேரி அணை, பவானி ஆறு மற்றும் பாசன வாய்க்கால்கள் பல பகுதிகளில் பாய்கின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், சிறுவா், சிறுமிகள் குடும்பங்களுடனும், நண்பா்களுடனும் குளிக்க செல்கின்றனா். அப்போது ஆபத்தான பகுதிகளில் எதிா்பாராதவிதமாக சிக்கி தண்ணீரில் மூழ்கி அல்லது நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்து விடுகின்றனா். குழந்தைகள் நீா்நிலைகளுக்கு பெற்றோரின் பாதுகாப்புடன் மட்டுமே குளிக்க செல்ல வேண்டும்.

பெற்றோா்கள், குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணா்வு வழங்கி நீா்நிலைகளில் ஆபத்தான பகுதிகளில் செல்வதை தடுக்க வேண்டும். பொதுமக்களும், நீா்நிலைகளில் அபாயகரமான பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பான பகுதிகளில் மட்டுமே குளிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.