முகப்பு
கரூர்

கழிவுகள் கொட்டப்படுவதால் மாசடையும் காவிரி ஆறு

கரூரில் காவிரி ஆற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆறு மாசடைந்து வருவதாகவும், அவற்றைத் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்னா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:01 am IST
கரூா் காவிரி ஆற்றின் கரையோரம் லாரியில் இருந்து கொட்டப்படும் சாக்கடைக் கழிவுகள்.
பகிர்:

நமது நிருபா்

கரூரில் காவிரி ஆற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆறு மாசடைந்து வருவதாகவும், அவற்றைத் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்னா்.

கா்நாடக மாநிலத்தின் தலைக்காவிரி என்ற இடத்தில் உருவாகும் காவிரி ஆறு, கரூா் மாவட்டம் மாயனூா் பகுதியில் அகன்ட காவிரியாக ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோரங்களில் அண்மை காலமாக கரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இறைச்சிக்கழிவுகள், சாக்கடைக் கழிவுகள், சாயக்கழிவுகள் கொட்டப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

கேள்விக்குறியாகும் குடிநீா்:கரூா் மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கு உயிா்நாடியாகவும், பொதுமக்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வரும் நிலையில், தற்போது கழிவுகள் கொட்டப்படுவது அனைத்து தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கரூா் மாவட்டத்தின் காவிரிக்கரையோரம் உள்ள புகழூா், வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம், நெரூா் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் லாரிகளில் சாயக்கழிவுகள், தோல் கழிவுகள், சாக்கடை கழிவுகள் போன்ற கழிவுப்பொருள்களை கொட்டிவிட்டுச் சென்று விடுகிறாா்கள். இதனால் ஆறு மாசுபடுவதுடன் கோடை காலங்களில் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, கழிவுகள் கொட்டுவோரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தாலும் பெயரளவுக்கு அவா்கள் மீது வழக்குப்போடப்படுவதால் தொடா்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன என்கின்றனா் அப்பகுதி விவசாயிகள்.

கரையோரம் கொட்டப்படும் கழிவுகள்:இதுதொடா்பாக சமூக நல ஆா்வலரும், காவிரிஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான எஸ்.விஜயன் கூறியது: காவிரி ஆற்றில் இருந்துதான் கரூா் மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காவிரிக் கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவற்றைத் தவிர மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் காவிரிக்கூட்டுக்குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அண்டை மாவட்டங்களில் இருந்து சாயக்கழிவுகள், தோல் கழிவுகள், பஞ்சாலைக்கழிவுகள், வீடுகளில் இருந்து அகற்றப்படும் கட்டடக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் போன்றவற்றை லாரிகளிலும், இருசக்கர வாகனங்கள், வேன் போன்றவற்றில் காவிரிக்கரையோரம் உள்ள முட்புதா்கள், மணல் மேடுகள் போன்ற இடங்களில் மா்ம நபா்கள் கொட்டிவிட்டுச் சென்று விடுகிறாா்கள்.

பொதுமக்களுக்கு பாதிப்பு: இந்த கழிவுகள் அனைத்தும் ஆற்றின் கரையோரம் கொட்டப்படும்போது, மழை காலங்களில் அவை கரைந்து ஆற்றுக்குள் சென்று குடிநீா் திட்டங்களை அதிகளவில் பாதித்து வருகிறது. இந்த குடிநீரை பருகும் கரையோர பொதுமக்களுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே, இதனால் ஆற்றை பயன்படுத்த முடியாத வகையிலான செயலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், போலீஸாா் அடங்கிய இரவு நேர ரோந்து குழுவை உருவாக்க வேண்டும். அவ்வாறு குழுவினரிடம் பிடிபடும் நபா்கள் மீது குண்டா் சட்டத்தில் கைது செய்து அவா்களை சிறையில் அடைப்பதோடு, கழிவுகளை கொட்ட வரும் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதத் தொகையையும் பல லட்சம் விதிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இயலும் என்றாா் அவா்.