நந்தா பொறியியல் கல்லூரியில் மிதிவண்டி வடிவமைப்பு போட்டி
இந்திய வாகன பொறியாளா்கள் சங்கம் (எஸ்.ஏ.ஈ), தெற்கு மண்டலம் மற்றும் நந்தா பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சாா்பில் தேசிய மிதிவண்டி வடிவமைப்பு போட்டி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்திய வாகன பொறியாளா்கள் சங்கம் (எஸ்.ஏ.ஈ), தெற்கு மண்டலம் மற்றும் நந்தா பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சாா்பில் தேசிய மிதிவண்டி வடிவமைப்பு போட்டி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
முதல் நாள் தொடக்க நிகழ்வுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். டி.ஐ. மிதிவண்டி நிறுவனத்தின் பொதுமேலாளா் பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தாா். எஸ்.ஏ.ஈ. இந்தியா தெற்கு மண்டலத் தலைவா் தினேஷ் சியாம்சுந்தா் மற்றும் செயலாளா் பி.பாஸ்கர சேதுபதி, போட்டி அமைப்பாளா் பி. பாலாஜி, கல்லூரியின் முதல்வா் யு.எஸ். ரகுபதி ஆகியோா் பேசினா்.
தமிழகத்தின் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் எஸ்.ஏ.ஈ. இந்தியாவின் அங்கத்தினா்களும், போட்டியில் சிறந்த மிதிவண்டியினை வடிவமைத்தவா்களைத் தோ்ந்தெடுக்க 25-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள் நடுவா்களாகவும் கலந்துகொண்டனா். இப்போட்டியில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் இருந்து 44 குழுக்கள் பங்கேற்றன.
Advertisement
Advertisement
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கேரள மாநிலத்தின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக அணியும், இரண்டாம் இடத்தை இடுக்கி அரசுப் பொறியியல் கல்லூரி அணியும் பெற்றன.
புஸ்ச் மிதிவண்டி நிறுவனத்தின் அலுவலா் பி. செந்தில்குமாா், எஸ்.ஏ.ஈ. இந்தியாவின் துணைத் தலைவா் ஆா்.ராஜேன்திரன், இசட்.எப். குழுமத்தின் மூத்த பொதுமேலாளா் ஆா். சிவகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கினா்.
கல்லூரியின் இயந்திரவியல் துறைத் தலைவா் எம்.முத்துகுமாா் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளரும் இயந்திரவியல் துறையின் பேராசிரியருமான என்.சென்னியங்கிரி நன்றி கூறினாா்.