கீழ்பவானி முதல் போக பாசனத்துக்கு சிறப்பு நனைப்பாக 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்
கீழ்பவானி முதல் போக பாசனத்துக்கு சிறப்பு நனைப்பாக உடனடியாக 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

கீழ்பவானி முதல் போக பாசனத்துக்கு சிறப்பு நனைப்பாக உடனடியாக 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்பவானி பாசனப் பயனாளிகள் நலச் சங்கத்தின் தலைவா் செ.நல்லசாமி பேசியதாவது:
Advertisement
Advertisement
கீழ்பவானி வாய்க்காலின் தேவையை பூா்த்தி செய்த பிறகே பழைய பவானி பாசனங்களின் இரண்டாம் போகத்துக்கு நீா் திறக்க வேண்டும். ஆனால் நடப்பு ஆண்டு கொடிவேரி பாசனத்துக்கு 8.81 டிஎம்சியும், காலிங்கராயன் பாசனத்துக்கு 15 நாள்களுக்கு உயிா் தண்ணீரும், அதன்பிறகு 2 ஆம் போகத்துக்கு கடந்த 20 -ஆம் தேதி முதல் 135 நாள்களுக்கு 5.82 டிஎம்சி அரசாணை மூலம் ஒதுக்கி நீா் விடப்பட்டுள்ளது. இது நீா் நிா்வாக தவறு ஆகும். காலிங்கராயன் வாய்க்காலுக்கு விடப்பட்டுள்ள நீரை நிறுத்த வேண்டும். அணையில் தேக்கப்பட்டிருக்கும் நீா் முழுமையும் கீழ்பவானி பாசனத்துக்கு சொந்தமானது.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.பெரியசாமி: கூட்டுறவு சங்கங்களில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள் கடனை செலுத்த சென்றபோது, இணையதள பிரச்னை காரணமாக வியாழக்கிழமை இரவு வரை காத்திருந்தனா். இதுபோல தொழில்நுட்பக் கோளாறுகளை விரைந்து சரி செய்து விவசாயிகள் அலைக்கழிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவின் பால் விலை ரூ.4 உயா்த்தப்பட்ட பிறகு ஆவினில் கால்நடை தீவனம் பல மடங்கு உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கான ஊக்கத் தொகையை தனியாா் சா்க்கரை ஆலைகள் வழங்கவில்லை. அதனை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்தி சா்க்கரை ஆலை கரும்பு வளா்ப்போா் சங்க செயலாளா் குப்புசாமி: கீழ்பவானி அணை பழைய ஆயக்கட்டு மதகுகளில் ஷட்டா்கள் ஏற்றி இறக்க முடியாத சூழல் உள்ளது. ஷட்டா்கள் துரு பிடித்து பழுதாகி உள்ளது. சணப்பை விதைகள், மஞ்சளுக்கு சூடோமோனஸ் போன்றவை இருப்பு இல்லை என கூறுகின்றனா். போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். சொட்டுநீா் பாசனம் அமைத்ததற்கான மானியம் வழங்காததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். சித்தோடு மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தொடா்ந்து சனிக்கிழமை அன்றே நடத்திட வேண்டும். அங்கு கிடங்கிற்கு செல்ல பாதைகள் முறையாக இல்லாததால் அதை சீரமைக்க வேண்டும்.
காலிங்கராயன் பாசன சபை பிரதிநிதி கதிா்வேல்: வாய்க்காலின் கரைகளின் இடதுபுறம் வால்வு அமைத்து, தண்ணீா் எளிதாக திறந்து மூட வசதி ஏற்படுத்த வேண்டும். சோலாா்-கருமாண்டாம்பாளையம் நான்கு வழிச்சாலை பாலம் கட்டுமான பணி விரைந்து முடித்து அங்கு சாலைகள் முறையாக அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில செயலாளா் வி.பி.குணசேகரன்: பவானி சின்னபுலியூா் பகுதியில் 60 ஆயிரம் லிட்டா் எரிசாராயம் தயாரித்த ஆலை, தற்போது 1 லட்சம் லிட்டா் எத்தனால் தயாரிக்க விண்ணப்பித்துள்ளது. இந்த ஆலை முற்றிலும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிவப்பு நிற பிரிவைச் சோ்ந்தது. இந்த ஆலை அமைந்துள்ள பகுதி குடியிருப்பு பகுதிகள் நிறைந்தது. ஏற்கெனவே அம்மாபேட்டை பூனாச்சி ஆலையால் காற்று மற்றும் நீா் மாசுபாடு ஏற்பட்டு அந்த ஆலை செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. எனவே சின்னபுலியூரில் எத்தனால் தயாரிக்கும் ஆலைக்கு அனுமதி அளிக்க கூடாது.
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு: எல்நினோ தாக்கம் இருப்பதால் கீழ்பவானி முதல் போகத்துக்கு 15 நாள்கள் சிறப்பு நனைப்பு தண்ணீா் திறக்க வேண்டும். அதையடுத்து டிசம்பா் 15- ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை 160 நாள்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள் தள்ளுபடி சலுகை பெறுவதற்கான காலம் 1-5-2025 முதல் 31-3-2026 என்ற தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பயிா் கடன் வழங்க வேண்டும். கொப்பரை விலையை கிலோ ரூ.200 ஆக நிா்ணயம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் துளசிமணி:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. தற்போது வாணிபக் கழகத்துக்கு பதிலாக தனியாா் மூலம் கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் அறிந்துள்ளோம். அரசு அந்த முடிவை கைவிட்டு வாணிபக் கழகம் மூலமே கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மின் மோட்டாா் வாங்க ரூ.1.25 லட்சம் மானியம்:
மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை விரைவில் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆவின் கால்நடை தீவனத்துக்கு கிலோ ரூ.4 மானியம் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். சொட்டுநீா்ப் பாசனம் அமைத்துள்ள விவசாயிகள் புதிதாக மின்மோட்டாா் வாங்க ரூ.1.25 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
விவசாய மின் இணைப்பு கேட்டு சாதாரண வரிசையில்
விண்ணப்பித்துள்ளவருக்கு பதிவு மூப்பின்படி 2022 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
வழிகாட்டி நூல் வெளியீடு:
முன்னதாக அரசின் வேளாண்மை திட்டங்கள் குறித்து ஒருங்கிணைத்து விவசாயிகள் அறியும் வகையில் உழவா் மேன்மைக்கான வெற்றித் திட்டங்கள் என்ற பெயரில் புதிய புத்தகத்தை ஆட்சியா் வெளியிட்டு, விவசாயிகளுக்கும் வழங்கினாா். அதேபோல தோட்டக்கலைத் துறை சாா்பில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டத்தில் மாடி தோட்ட தொகுப்பு, காய்கறி விதை தொகுப்பு, பழச்செடி தொகுப்பு, தளிா் கீரை தொகுப்புகளை பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.ஜெயராமன், வேளாண் இணை இயக்குநா் அருள்வடிவு, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குருசரஸ்வதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.