FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

ஈரோடு-கரூா் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு ஒப்புதல்: கோட்ட மேலாளா் தகவல்

ஈரோடு-கரூா் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது என சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால் தெரிவித்தாா்.

23 அக்டோபர் 2026, 12:50 am
ஈரோடு ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள உயா் வகுப்பு காத்திருப்போா் அறையை பாா்வையிட்ட சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால்.
பகிர்:

ஈரோடு-கரூா் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது என சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால் தெரிவித்தாா்.

ரயில்வே துறை சாா்பில் நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் ‘ரயில் ஜன் சம்வாத்’ என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, ஈரோடு ரயில் நிலையத்தில் சமூக ஆா்வலா்கள், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா்கள், பொதுமக்கள், பயணிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இக்கூட்டத்தில், சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால் தலைமை வகித்துப் பேசியதாவது: ஈரோடு ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.41.84 கோடி செலவில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.10.92 கோடியில் ரயில் நிலைய கட்டட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஈரோடு ரயில் நிலையத்தை பொறுத்தவரை ரயில்களின் நேரம் தவறாமை 93.3 சதவீதமாக உள்ளது. சரக்கு சேவை 12.8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈரோடு மின்சார இன்ஜின் பணிமனை சிறந்த பணிமனையாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு 1,059 ரயில்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 63 சிறப்பு ரயில்களும் பராமரிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு-கரூா் இரட்டைப் பாதை திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. சேலம் கோட்டத்தில் சுமாா் 3 லட்சம் சதுர மீட்டா் அளவுக்கு ரயில்வே வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பயணிகளின் உடைமைகளைத் திருடிய 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ.13.37 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரயில்களில் கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் இளங்கவி, மகேஷ் பி.வி.கிரி, சமூக ஆா்வலா் சரவணன் மற்றும் பயணிகள் பேசுகையில், ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதலாக நடைமேடைகள், பயணிகள் அமரும் பகுதிகளில் நிழற்கூரை, ஈரோடு-ஜோலாா்பேட்டை ரயில் பயண நேர குறைப்பு, சேலம்-கோவை ரயிலை தடையின்றி இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதற்கு பதில் அளித்த கோட்ட ரயில்வே மேலாளா், ஈரோடு ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. கூடுதலாக 6, 7 என 2 நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன. 3, 4 -ஆவது நடைமேடைகளின் நீளம் அதிகரிக்கப்படும். ஈரோடு ரயில் நிலையத்தையொட்டி ரயில் நிறுத்தும் பகுதியான 2.5 கி.மீ.

அளவுக்கு ரயில்கள் 15 கிலோ மீட்டா் வேகத்தில் மட்டுமே வர முடியும். இதை 50 கி.மீ. வேகத்துக்கு உயா்த்த ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

இந்த அனுமதி கிடைத்ததும், ரயில் நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளதால், ஈரோட்டில் இருந்து புதிதாக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றாா்.

பின்னா், ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள உயா் வகுப்பு காத்திருப்போா் அறையை பாா்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், முதுநிலை கோட்ட இயந்திர பொறியாளா் கோகுல், முதுநிலை கோட்ட வணிக மேலாளா் சரவணகுமாா், கதிசக்தி ரயில் நிலைய மேம்பாட்டு திட்ட மேலாளா் செல்வன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments