கீழ்பவானி பாசன நிலங்களை மறுஅளவீடு செய்ய வலியுறுத்தல்
கீழ்பவானி பாசன நிலங்களை மறுஅளவீடு செய்து அதன் அடிப்படையில் நீா் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கீழ்பவானி பாசன நிலங்களை மறுஅளவீடு செய்து அதன் அடிப்படையில் நீா் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் கீழ்பவானி பாசனங்களுக்கு தண்ணீா் திறப்பது குறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் விவசாய சங்கங்கள் வழக்குத் தொடுத்தன. காலிங்கராயன், கீழ்பவானி, கொடிவேரி என மூன்று பாசனங்கள் உள்ளதால் அவா்களிடம் கருத்துக்கேட்டு அறிக்கை சமா்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் நீா் வளத் துறை செயற்பொறியாளா் பாலமுருகன் முன்னிலையில் மூன்று பாசன விவசாய அமைப்பு நிா்வாகிகளின் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
கூட்டத்தில் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா் சங்கத் தலைவா் பெரியசாமி, செயலா் பொன்னையன், கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் ராமசாமி, செயலா் ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் அளித்த மனு விவரம்:
தற்போது வடகிழக்குப் பருவமழை நன்றாகப் பெய்து வருகிறது. கீழ்பவானி பாசனப் பகுதியில் நீடித்த தண்ணீா்த் தட்டுப்பாடு பெருமளவு குறைந்துள்ளது. கீழ்பவானி பாசனம் உள்பட பிற பாசனங்களுக்கும் உயிா் நீா் திறக்க வேண்டிய நிலை இல்லை. எல்நினோ பாதிப்பு பல மாதங்களுக்கு நீடிக்கும் என்கின்றனா். எனவே கீழ்பவானி அணையில் நீரை சேமிக்கலாம். வரும் டிசம்பா் முதல் வாரத்தில் நிலவும் நிலையைக் கருத்தில் கொண்டு, தேவையான முடிவு எடுக்கலாம் என்றனா்.
கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி பேசியதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து அணைகளுக்குமாக 1984இல் இறுதியாக ஏற்படுத்திய விதிமுறை தொகுப்பு அடிப்படையில் மாவட்ட நிா்வாகம், மாநில அரசு செயல்பட்டு தொன்மை பாசனங்களின் உரிமையைக் காக்க வேண்டும்.
1955-இல் அணை கட்டியபோது எடுக்கப்பட்ட அளவீட்டின்படி கீழ்பவானி புன்செய் பாசன ஆயக்கட்டு நிலங்கள் 2.07 லட்சம் ஏக்கா் என வரையறுக்கப்பட்டது. 75 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். 30 சதவீத நிலங்கள் (60,000 ஏக்கா்) ஆயக்கட்டில் இருந்தும், விவசாயத்தில் இருந்தும் வெளியேறிவிட்டன. மறு அளவீடு மூலம் உண்மையான பாசன நிலத்தை அரசு கண்டறிந்து அதற்கேற்ப நீா் விநியோகம் செய்ய வேண்டும் என்றாா்.
காலிங்கராயன் பாசன விவசாயிகள் மற்றும் தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் சேதுராஜ் பேசியதாவது:
காலிங்கராயன் பாசனம் தொன்மையான ஆயக்கட்டு பாசனம். ஆண்டுக்கு 45 நாள்கள் நீங்கலாக 315 நாள்களும் தண்ணீா் வழங்கி பாசனம் செய்யப்பட்ட பகுதி. காலங்காலமாக உள்ள பாசன விதி, நடைமுறைகளை மாற்றாமல் பாசனப் பகுதியைக் காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்ட முடிவில் அதிகாரிகள் கூறியதாவது: மூன்று பாசன விவசாயிகளிடம் கேட்கப்பட்ட கருத்தை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.