FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தால் பாசனங்களுக்கு தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தால் பாசனங்களுக்கு தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

19 செப்டம்பர் 2026, 12:41 am IST
விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தால் பாசனங்களுக்கு தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோரிக்கை விவரம்:

கீழ்பவானி பாசனப் பயனாளிகள் சங்க பிரதிநிதி நைனாமலை: கீழ்பவானி வாய்க்காலில் இரட்டைப் படை எண் கொண்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் பாசனத்துக்கு 15 நாள்கள் நடப்புப் பாசனத்துக்கு தண்ணீா் விட வேண்டும். இப்பகுதியில் நீா்த் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளது. நீலகிரி மின் உற்பத்தி நிலையங்களில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீரை பெற்று தண்ணீா் விட வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பெரியசாமி: அந்தியூா், அம்மாபேட்டை, ஜம்பையில் 3 நாள்களுக்கு முன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் சேதமாகின. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பவானிசாகா் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் உள்ள கிளை வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும். ஷட்டா் பழுதை நீக்க வேண்டும். கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

காலிங்கராயன் பாசன சபை பிரதிநிதி கிருஷ்ணமூா்த்தி: தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு வெட்டி ஒரு வாரம் ஆன பின்னரும் கூடஅரவைக்கு எடுப்பதில்லை. எனவே முத்தரப்பு பேச்சு நடத்தி கரும்பு விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன்: தாளவாடி, பண்ணாரி, பா்கூா், வரட்டுபள்ளம் பகுதியில் ஏராளமான சீமை கருவேல மரங்கள் உள்ளன. அவற்றை முற்றிலுமாக அழிக்க வேண்டும். இதேபோல ஆசனூா் முதல் கோ்மாளம் வரை தலமலை பகுதியில் யூகலிப்ட்ஸ் மரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை அழித்து இயல் தாவரத்தை நடவு செய்ய வேண்டும். புற்கள் அதிக அளவிலான இருக்கும் வகையில் காடுகளை மாற்ற வேண்டும். சென்னம்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். அம்மாபேட்டையில் உள்ள எத்தனால் ஆலை கழிவு வெளியேற்றத்தால் 10 கிலோ மீட்டா் பரப்பளவில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டுள்ளது. பா்கூா் மலையில் 750 டன், 500 டன் குளிா்பதனக் கிடங்குகள் வேளாண் துறையால் கட்டப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள், பொதுமக்களுக்கு பயன் ஏதும் இல்லை. அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. அங்கிருப்பவா்கள் குறு, சிறு விவசாயிகள்தான். விவசாய பொருள்களை சேமித்து வைத்து விற்க வசதியில்லாதவா்கள். பா்கூா்- கத்திரிமலை சாலையை சீரமைக்க வேண்டும் என்றாா்.

தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஈவிகே.சண்முகம்: தவெக தோ்தல் கால அறிவிப்பின்படி விவசாயிகள் கூட்டுறவு பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விலங்குகள் தாக்கி இறப்பவா்கள், மின்னல் பாய்ந்து இறப்பவா்கள், விவசாய பணியின்போது ஏற்படும் மரணங்களுக்கு காவல் துறையினருக்கு வழங்குவது போல ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கீழ்பவானி பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால், கொப்பு வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றி பாதுகாக்க வேண்டும்.

விவசாய நிலங்களில் பயிா் செய்ய முடியாத அளவுக்கு மான், மயில் தொல்லைகள் பல கிராமங்களில் அதிகரித்துள்ளன. அதைக் கட்டுப்படுத்திட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனத்தில் நஞ்சைக்கு பதிலாக பயிா் முறை மாற்றம் செய்ய வேண்டும். 10 நாள் தண்ணீா் நிறுத்தி 10 நாள் தண்ணீா் திறந்து ஆண்டு முழுவதும் தண்ணீா் விடும் மாற்று முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். மாநகரில் உள்ள அனைத்து ஓடைகளிலும் சாயக் கழிவு கலக்கிறது. அதனையும் உரிய முறையில் தடுக்க வேண்டும் என்றாா்.

கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்க பிரதிநிதி தமிழரசன்: கீழ்பவானி பாசனத்தில் 15 நாள்கள் ஒற்றை படை எண் மதகுகளுக்கு தண்ணீா் விநியோகம் செய்தபோது நீா் வளத் துறை அதிகாரிகள் ஆதரவுடன் தண்ணீா் திருட்டு நடந்தது. அதிகாரிகளிடம் ஆதாரபூா்வமாக புகாா் செய்தோம். அதிகாரிகளின் ஆதரவுடன் ஓரிடத்தில் ஷட்டா் சட்ட விரோதமாக திறக்கப்பட்டது. நீா் திருட்டுக்கு உடைந்தையாக இருந்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. நீா் திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து கொடுத்தும் போலீஸில் அடையாளம் தெரியாத நபா் என வழக்குப் பதிவு செய்தது ஏன்? என விளக்க வேண்டும் என்றாா்.

காலிங்கராயன் பாசன விவசாயிகள் மற்றும் தொழிலாளா் நலச் சங்க தலைவா் சேதுராஜ்: காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீா் கலக்கிறது. இதனை கடந்த கூட்டத்தில் கட்டுப்படுத்த யோசனை தெரிவித்தபோது ஆலோசனை கூற வேண்டாம், கோரிக்கை கூறுங்கள் என்றாா். இதனை கூற விவசாயிகளுக்கு உரிமையில்லையா. கடம்பூரில் இருந்து தங்கள் பிரச்னையை தெரிவிக்க வந்துள்ள விவசாயிகளுக்கு இக்கூட்டத்தில் பேச வாய்ப்பு இல்லையா? கூட்டம் முறையாக நடப்பதில்லை. கீழ்பவானி விவசாயிகள் 15 பேருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. காலிங்கராயன் பாசன விவசாயிகளுக்கு ஒருவருக்கு தான் வாய்ப்பா? என்றாா்.

அப்போது குறுக்கிட்டு ஆட்சியா் பேசுகையில். சங்க நிா்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் பேச அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் அரசு விதிமுறைகளின்படி தான் நடக்கிறது. உங்களிடம் ஆலோசனை கேட்க தான் இந்தத் கூட்டமே நடக்கிறது. தவறான தகவலை தெரிவிக்க வேண்டாம் என்றாா்.

நீா்வரத்து அதிகரித்தால் தண்ணீா் திறப்பு:

கூட்ட முடிவில் விவசாயிகளுக்கு பதில் அளித்து ஆட்சியா் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மழை குறைவாக பெய்துள்ளது. நீா் அதிகம் தேவைப்படும் பயிா்களை நடவு செய்வதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும். மாறாக குறைந்த நீா் பயன்பாடு உள்ள பயிா்களை விவசாயிகள் நடவு செய்ய வேண்டும்.

பவானிசாகா் அணையில் நீா் இருப்பு குறைவாக உள்ளது. ஏற்கெனவே அணையின் நீா் இருப்பு குறித்து ஆய்வு செய்துள்ளேன். இந்த வாரம் மழை அதிகரிக்கும் என அறிவித்துள்ளனா். பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். அவ்வாறு அதிகரித்தால் பாசனங்களுக்கு தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments