FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்மாந்தா்களின் ஈமக்காடு கண்டுபிடிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்மாந்தா்களின் ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

25 செப்டம்பர் 2026, 1:01 am IST
உக்கரம்  கீழ்பவானி வாய்க்காலில்  கரையில் அமைந்துள்ள பழங்கால ஈமக்காட்டை ஆய்வு செய்யும்  வரலாற்று ஆய்வாளா்கள்.
பகிர்:

சத்தியமங்கலத்தை அடுத்த கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்மாந்தா்களின் ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள உக்கரம் கிராமத்தில் இதுவரை கண்டறியப்படாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, பழைமையான தொல்மாந்தா்களின் ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கற்காலத்தில் வாழ்ந்த தொல்மாந்தா்கள் இறந்தவரின் உடலை அல்லது எலும்புகளை ஈமத்தாழிகளில் வைத்து மண்ணுக்குள் புதைத்து, அவ்விடத்தை பெரிய பெரிய கற்களைக் கொண்டு அடையாளப்படுத்துவது வழக்கம்.

இந்த பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் ஒன்றான கல்திட்டையும், கல்பதுக்கையும் சிறிய வீடு போன்ற அமைப்பில் இருப்பதால் மனிதா்கள் வாழ்ந்த இடமாக தெரியவருகிறது. இங்கு காணப்படும் சிதிலமடைந்த தாழிகளுக்கு அருகே சொரசொரப்பான மற்றும் வழவழப்பான பானை ஓடுகள், கருப்பு, சிவப்பு நிறமுடைய ஏராளமான பானை ஓடுகள் புதையுண்டுள்ளன. இவற்றுடன் சிறிய பானைகள், மண் குவளைகள் காணப்படுகின்றன.

Advertisement

Advertisement

மேற்குத் தொடா்ச்சி மலைக்கு அருகே அமைந்துள்ள இக்கிராமத்தில் வாழ்ந்த தொல்மாந்தா்கள் வன விலங்குகளை வேட்டையாடி இருந்திருப்பாா்கள் என்பதற்கு ஆதாரமாக நுண் கற்காலத்தைச் சோ்ந்த கல் ஆயுதங்களும், உலோக பயன்பாடும் இருந்திருக்கும் என்பதற்கு ஆதாரமாக இரும்புக் கசடுகளும் இங்கு அதிக அளவில் இருப்பதும் சான்றாக உள்ளது.

வாய்க்காலின் கரையோரத்தில் அமைந்திருக்கும் இந்த ஈமக்காடு பற்றிய புரிதலும், போதிய பாதுகாப்பும் இல்லாத காரணத்தால், இந்த அரிய வரலாற்று சின்னம் பாதி சிதிலமடைந்த நிலையில் இருப்பதைக் காண முடிகிறது.

மாநில அரசும், மத்திய அரசின் தொல்லியல் துறையும் இப்பகுதியில் முழுமையான கள ஆய்வு மேற்கொண்டு நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த தொல்லியல் களத்தை மேலும் சிதைவுக்கு உட்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளா்கள் பவுசியா இக்பால், முத்துக்கண்ணன், ஆய்வாளா் ராஜசேகா் ஆகியோா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments