கூடலூா் அருகே புலி தாக்கி விவசாயி உயிரிழப்பு
கூடலூா் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, புலி தாக்கியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கூடலூா் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, புலி தாக்கியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (56). இவா் தனது தோட்டத்தில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்தாா்.
அப்போது புதா் மறைவிலிருந்து திடீரென பாய்ந்த புலி ஒன்று, அவரைத் தாக்கி கடித்துக் குதறியது. மேலும், அவரது உடலை சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு இழுத்துச் சென்று, உடல் பாகங்களை சாப்பிட்டுச் சென்றது.
Advertisement
Advertisement
இதே ஓவேலி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலகிருஷ்ணன் என்ற முதியவரை புலி தாக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது. இரண்டு வார காலத்துக்குள் அதே பகுதியில் இரண்டாவதாக ரவிச்சந்திரனை புலி தாக்கி கொன்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ரவிச்சந்திரனின் உடலை எடுக்க விடாமல் ஓவேலி 4-ஆம் நம்பா் பகுதியில் வனத் துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்கொல்லியாக மாறியுள்ள அந்தப் புலியை பிடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத் துறை உயா் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள வனத் துறையினரும் காவல் துறையினரும், புலியைத் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். ஆனாலும், பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.