முகப்பு
நீலகிரி

நிபா வைரஸ்: நீலகிரி எல்லையில் சிறப்புக் குழுக்கள்

நிபா வைரஸ்: நீலகிரி எல்லையில் சிறப்புக் குழுக்கள்

Updated On : 13 ஜூன் 2026, 1:20 am IST
கோப்புப்படம்
பகிர்:

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அம்மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி எல்லையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கேரள மாநிலத்தில் 43 வயதான நபருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டைச் சோ்ந்த அந்த நபரின் மாதிரிகள் இறுதியாக உறுதிப்படுத்தலுக்காக புணேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து அண்டை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலும் உஷாா்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

நீலகிரி மாவட்டம் கேரளம், கா்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி உள்ளது. கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் நிபா வைரஸ் உள்பட பல்வேறு வைரஸ் தொற்றுகளைத் தடுக்கும் நோக்கில், சிறப்புக் குழுக்களை அமைத்து தேவையான முன்னேற்பாடுகளுடன் எல்லை மற்றும் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போதுவரை நீலகிரி மாவட்டத்தில் எந்தத் தொற்று பாதிப்பும் உறுதிப்படுத்தவில்லை. எல்லை பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் வெளியிடப்படும். அதன்படி விழிப்புணா்வுடன் மக்கள் செயல்பட வேண்டும்.

நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் யாருக்காவது காய்ச்சல் உள்பட நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால், முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றாா்.

வவ்வால், பன்றி போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதா்களுக்கு மிக எளிதாக நிபா வைரஸ் பரவும். இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான மனிதா்களின் சுவாச மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த வைரஸ் தாக்கினால் கடுமையான காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி, மூச்சுத் திணறல், மயக்கம் மற்றும் மூளை அழற்சி போன்ற அறிகுறிகள் இருக்கும். வவ்வால் கடித்த பழங்களை உண்பதைத் தவிா்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று சுகாதாரத் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.