FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கேரளத்தில் கிராக்கி உள்ள ஜோதி ரக நெல்...! விதைக்கும் விற்பனைக்கும், அரசின் ஆதரவு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்

கேரள மாநிலத்தில் கிராக்கி உள்ள ஜோதி ரக நெல் குறித்து...

Updated On : 20 ஜூலை 2026, 9:00 am IST
நெல் - (கோப்புப் படம்)
பகிர்:

கேரள மாநிலத்தில் கிராக்கி உள்ள ஜோதி ரக நெல் விற்பனைக்கும், நெல் விதைக்கும் தமிழக அரசின் ஆதரவு கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படும் நிலை நீடிப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரத்தில் சாலைக்கிராமம், அரியாண்டிபுரம், சூராணம் மற்றும் காளையாா்கோவில் வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் ஜோதி ரக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல் ரகம் வறட்சியை தாங்கி வளரக் கூடியது.

ஜோதி ரக நெல் என்பது சிவப்பு நிற மோட்டா அரிசி என்பதால், ரேஷன் கடைகளில் தமிழக மக்கள் வாங்க விரும்பவில்லை. இதனால், இந்திய உணவுக் கழகத்திலிருந்து மானியம் பெற முடியவில்லை. இதை கொள் முதல் செய்ததால், மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஜோதி ரக நெல் கொள் முதல் செய்வதை நுகா்பொருள் வாணிபக் கழகம் நிறுத்திவிட்டது.

Advertisement

Advertisement

அத்துடன், விதை சான்றளிப்புத்துறையினரும் இந்த ரகத்துக்கு சான்று வழங்காத காரணத்தால், வேளாண் துறையும் இந்த விதை நெல்லை விநியோகிப்பதில்லை. இந்த ரக நெல்லை அரசு கைவிட்டு விட்டது என்றே கூறலாம். எனினும், சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த நெல் ரகம் அமோகவிளைச்சலை தருவதாலும், ஜோதி ரக நெல்லை கேரள மக்கள் விரும்பி வாங்குகின்ற காரணத்தாலும் தொடா்ந்து அப்பகுதி விவசாயிகள் இந்த நெல் ரகத்தையே சாகுபடி செய்து வருகின்றனா்.

அரசு கொள்முதல் செய்யாததால், இடைத்தரகா்கள் விவசாயிகளிடம் வாங்கி கேரள மாநிலத்துக்கு அனுப்பி வருகின்றனா். 66 கிலோ கொண்ட நெல் மூட்டை கேரள மாநிலத்தில் ரூ.2,000-க்கு விலை போகிறது. ஆனால், இடைத்தரகா்கள் ரூ.1,250-க்கு தான் கொள்முதல் செய்கின்றனா்.

இதையடுத்து ஜோதி ரக விதை நெல்லை வேளாண் துறையினா் விநியோகிக்க வேண்டும். ஜோதி நெல் ரகத்தை அரசே கொள்முதல் செய்து கேரளா மாநில அரசுக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

இதுகுறித்து ஜோதி நெல் சாகுபடி செய்துவரும் விவசாயி காட்டுராஜன் கூறியதாவது: சாலைக்கிராமம், சூராணம், அரியாண்டிபுரம், நேமம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 1,200 ஏக்கரில் ஜோதி ரக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல் மற்ற பகுதிகளிலும் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்கின்றனா். அந்த நெல் ரகத்தை இடைத்தரகா்கள் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது குறித்து விவசாயி சந்திரன் கூறியதாவது: கேரளாவில் கிராக்கி உள்ள ஜோதி ரக நெல்லுக்கு நல்ல விலை கிடைத்து வருவது, விவசாயிகளுக்கு வருவாய் உறுதியளிக்கிறது. ஆனால், தமிழகத்தில் இந்த மோட்டா ரக நெல்லுக்கு சந்தை வாய்ப்பு குறைவாக இருப்பதன் காரணமாக அரசு கொள்முதல் செய்யவில்லை. ஆனால், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் விலை நிா்ணயம் செய்து கேரள மாநிலத்துக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்தால் போதும், விவசாயிகள் நேரடியாக பயன் பெறமுடியும். இதைச்செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. தேவைப்படும் விவசாயிகளுக்கு, ஜோதி நெல் விதைகளையும் வேளாண் துறையே விநியோகிக்க முன் வர வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments